ஃபுட் பாய்சன் என்ற வார்த்தையை அடிக்கடி பலரும் உபயோகிப்பதைப் பார்க்கிறோம். உண்மையில் ஃபுட் பாய்சன் என்றால் என்ன, உணவு விஷமாவதைக் குறிக்கிறதா, இதன் அறிகுறிகள் என்ன, அடிக்கடி ஏற்படும் அந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு?
“உணவு மாசடைவது அல்லது கலப்படமாவதையே `ஃபுட் பாய்சன்‘ என்கிறோம். நடைபாதைக் கடைகளில் விற்கப்படும் உணவுகள்தான் இப்படி ஆக வேண்டும் என்றில்லை, நட்சத்திர ஹோட்டல் உணவுகளாலும் ஃபுட் பாய்சன் ஆகலாம். அந்த உணவு எப்படிக் கையாளப்படுகிறது என்பதைப் பொறுத்தது அது.
உணவானது பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றுக்கு உள்ளாகும்போதுதான் விஷமாகிறது. பெரும்பாலும் பாக்டீரியா தொற்றே இதற்குக் காரணமாக இருக்கிறது. அரிதாக வைரஸ் தொற்றாலும் இப்படி நிகழலாம்.
உணவு கெட்டுப்போவதாலும், காலாவதி ஆன பொருள்களைப் பயன்படுத்திச் சமைப்பதாலும்கூட ஃபுட் பாய்சனிங் ஏற்படலாம்.
காய்கறிகளை நறுக்கும்போது, சமைக்கும்போது, பரிமாறும்போது என எப்போது வேண்டுமானாலும் இப்படி உணவு நஞ்சாகலாம். அப்படி நஞ்சானதன் அறிகுறி நம் உடலில் தெரியும்போது அதை ஃபுட் பாய்சனிங் என்று உணர்கிறோம்.
ஃபுட் பாய்சனிங்கின் முதல் அறிகுறி வாந்தி. சிலருக்கு வயிற்றுப்போக்கும் இருக்கலாம். வயிற்றுவலி, வயிற்றை இறுக்கிப் பிடித்த உணர்வு, காய்ச்சல், தசைவலி, களைப்பு போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தில் அதே உணவைச் சாப்பிட்டிருப்பார்கள். ஒருவருக்கோ, இருவருக்கோ ஃபுட் பாய்சனிங் பாதிப்பு இருக்கலாம். மற்றவர்களுக்கு இல்லாமலும் இருக்கலாம்.
எனவே, இந்த பாதிப்பானது ஒருவரது நோய் எதிர்ப்பாற்றலையும் பொறுத்தது. நோய் எதிர்ப்பாற்றல் அதிகமுள்ளோருக்கு ஃபுட் பாய்சனிங் ஏற்படாமலும் இருக்கலாம்.

இந்தப் பிரச்னைக்குப் பெரும்பாலும் சிகிச்சைகள் தேவைப்படாது. எளிதில் செரிமானமாகும் இளநீர், கஞ்சி, ஜூஸ், ஓஆர்எஸ், எலக்ட்ரால் போன்ற உணவுகளைச் சாப்பிட்டு, ஓய்வெடுத்தாலே பிரச்னை தானாகக் குணமாகிவிடும்.
ஒரு வேளை இரண்டு நாள்களுக்கு மேலும் இந்தப் பிரச்னை நீடித்தாலோ, என்ன சாப்பிட்டாலும் உடனே வாந்தி அல்லது வயிற்றுப்போக்கின் மூலம் வெளியேறுகிறது என்றாலோ உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
குழப்பநிலை, களைப்பு போன்றவை உடலில் நீர் வறட்சி ஏற்பட்டதற்கான அறிகுறிகள். அவை தொடர்ந்தாலும் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, வயதானவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தக் கூடாது.
கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு உள்ளவர்கள், சிறுநீரக நோயாளிகளும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
நீண்ட நேரம் வெளியே வைத்திருப்பதால், சரியாகப் பராமரிக்காததால், சமைக்கும்போதான அசுகாதார கையாளல் காரணமாக… இப்படி உணவானது எந்தக் கட்டத்திலும் நஞ்சாகலாம்.
காய்கறிகள், அசைவம் போன்றவற்றை வெட்டும் போர்டுகளில் கிருமிகள் சேர்வதால்கூட இப்படி நிகழலாம்.
உணவைக் கையாளும்போது சரியான சுகாதாரம் பராமரிக்கப்பட வேண்டும். பால், தயிர், சீஸ், பனீர், அசைவ உணவுகள் போன்றவற்றில் இப்படிக் கிருமித் தொற்று எளிதில் பரவும் வாய்ப்புகள் உண்டு.
எப்போது, யார் சமைத்தாலும் கைகளை நன்கு கழுவிய பிறகே சமைக்க ஆரம்பிக்க வேண்டும்.
வெளியிடங்களில் சாப்பிடும்போது உணவு சரியாக பராமரிக்கப்படுகிறதா, அந்த இடம் சுகாதாரமாக இருக்கிறதா, உணவைக் கையாள்பவர்கள் சுத்தமாக இருக்கிறார்களா என்பதையெல்லாம் கவனிக்க வேண்டியதும் முக்கியம்” என்கிறார்கள் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்டுகள்.