"How can NCC camp without permission from school education department?" : High Court Question!

”பள்ளிக்கல்வி துறை அனுமதியின்றி எப்படி என்சிசி முகாம் நடத்த முடியும்?” : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகம்

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை தொடர்பான வழக்கின் விசாரணை அறிக்கையை இன்று (ஆகஸ்ட் 28) பிற்பகல் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி பர்கூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் அதிர்ச்சி அளித்தது.

இதுதொடர்பாக முக்கிய குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்ட சிவராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கை ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வரும் நிலையில், இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் தனது வாதத்தில், “தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த அறிக்கையில் மாணவியின் பெயரைத் தவிர மற்ற அனைத்து விவரங்களையும் கூறி அடையாளத்தை அம்பலப்படுத்தி விட்டனர்.

இந்த விவகாரத்தில் மேலும் 4 பள்ளிகளுக்கு தொடர்புள்ளது. ஆனால் இதுகுறித்து விசாரணை அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கிய தமிழ்நாடு அரசு, மாணவிக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை” என குற்றஞ்சாட்டினார்.

இந்த வழக்கில் தமிழக அரசின் விசாரணை நேர்மையாக இருக்காது. எனவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்” என கோரினார்.

தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் முன்வைத்த வாதத்தில், “போலி என்.சி.சி. முகாமில் மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என பள்ளி தரப்பில் கூறியதால் மாணவிகள் புகார் அளிக்கவில்லை.

ஒரு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பெற்றோரிடம் கூற அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் இதுவரை பள்ளி உரிமையாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிவராமனின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அது கிடைத்ததும் நீதிமன்றத்தில் உடனடியாக தாக்கல் செய்யப்படும்.

சமூக நலத்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரியில் முகாமிட்டு மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கி வருகின்றனர். ஐ.ஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு வழக்கை விசாரித்து வருகிறது” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பள்ளிக் கல்வி துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும்? பள்ளி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” என கேள்வி எழுப்பினர்.

அதற்கு, ”பள்ளியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிற்பகல் 2:15க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

பணம் தராமல் அலைக்கழிப்பு : PVR நிறுவனத்துக்கு எதிராக திரும்பும் விநியோகஸ்தர்கள்!

மலையாள நடிகைகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் : “No என்றால் No தான்”…குஷ்பு பதிவு!

ரேகா நாயர் கார் ஏறி ஒருவர் பலி: நடிகை விளக்கம்!

 

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *