சித்தேரியை தனியாருக்கு எப்படி பட்டா போட்டு தர முடியும்? அன்புமணி ராமதாஸ்

Published On:

| By Kavi

How can Chitteri Lake be given to private?

நீர்நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் வேளாண்மைக்கு பயன்பட்டு வந்த சித்தேரியை எப்படி தனியாருக்கு பட்டா போட்டு தர முடியும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். How can Chitteri Lake be given to private?

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “சென்னையை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் உள்ள வேளாண் பயன்பாட்டுக்கான, சித்தேரியை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக்கி விற்பனை செய்யும் முயற்சியில் தனியார் நில வணிக நிறுவனம் ஈடுபட்டிருக்கிறது. பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்ட ஏரியை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க வருவாய்த்துறை அதிகாரிகளும் துணைபோவது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காயரம்பேடு கிராமம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கிராமம் ஆகும். அதனால், காயரம்பேட்டில் ஏரிகளும், அவற்றுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களும் உண்டு. சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக காயரம்பேடு கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

நாடு முழுவதிலுமிருந்து காயரம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள நில வணிக நிறுவனங்கள், அங்குள்ள நிலங்களை கொத்துக் கொத்தாக வாங்கி வீட்டுமனைகளாக மாற்றியமைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. அத்தகைய நிறுவனங்களில் ஒன்றுக்கு தான் 21 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை தாரை வார்க்கும் சதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனியார் நில வணிக நிறுவனம் ஒன்று, காயரம்பேடு கிராமத்தில் புல எண் 370-இல் உள்ள சுமார் 100 ஏக்கர் புன்செய் நிலங்களை விலைக்கு வாங்கியிருக்கிறது. அதை ஒட்டி, புல எண் 430-இல் சித்தேரி தாங்கல் என்ற ஏரி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த ஏரியின் கரைகளை உடைத்து, சமன் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட நில வணிக நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

பாசன ஆதாரமாக திகழும் ஏரியின் கரைகளை தனியார் நிறுவனம் எவ்வாறு சமன்படுத்த முடியும் என்ற எண்ணத்தில் விசாரித்தபோது, சித்தேரி தாங்கலை அந்த நிறுவனத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறையினர் பட்டா போட்டுக் கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது. 1989 வரையிலான நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. அந்த ஆவணங்களில் ஏதேனும் திருத்தம் செய்து பட்டா வழங்குவது யு.டி.ஆர் பட்டா (Updating Data Registry) என்று அழைக்கப்படுகிறது.

இந்த முறையில்தான் தனியார் நிறுவனத்திற்கு சித்தேரி அமைந்துள்ள 21 ஏக்கர் நிலம் பட்டா செய்து வழங்கப்பட்டுள்ளது. சித்தேரி தாங்கலுக்கு நீர் வருவதற்கான கால்வாய்கள் இன்றும் உள்ளன. சித்தேரி நிரம்பினால் அதிலிருந்து வழியும் கூடுதல் நீர் அருகிலுள்ள காயரம்பேடு பெரிய ஏரிக்கு செல்வதற்கான கால்வாய்களும் இப்போதும் உள்ளன. அவ்வாறு இருக்கும்போது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வேளாண்மைக்கு பயன்பட்டு வந்த சித்தேரியை எப்படி தனியாருக்கு பட்டா போட்டு தர முடியும்?

நீர்வளங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும் அவை உடனடியாக மீட்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அரசை வலியுறுத்தி வருகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளைக் காரணம் காட்டி, யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஆற்றின் கரைகளுக்கு அருகில் குடிசை அமைத்துத் வாழும் ஏழை மக்கள் கூட அரசால் அப்புறப்படுத்தப்படுகின்றனர். ஆனால், வேளாண் பயன்பாட்டுக்கான சித்தேரி என்ற ஏரியை தனியார் நில வணிக நிறுவனத்திற்கே அதிகாரிகள் பட்டா போட்டு வழங்கியுள்ளனர் என்றால், அவர்களுக்கு அதற்கான துணிச்சல் எங்கிருந்து வந்தது?

அதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும். தனியார் நிறுவனம் விலை கொடுத்து வாங்கிய நிலங்களை வீட்டு மனையாக்கி விற்பனை செய்ய எதிர்ப்பு இல்லை;  21 ஏக்கர் ஏரி நிலத்தில் வீட்டுமனைகள் அமைக்க அனுமதிக்கக்கூடாது என்று காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர். பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.  அதன்பின்னர் காயரம்பேடு கிராமத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்த பிறகுதான் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

ரூ.200 கோடி மதிப்பும், 21 ஏக்கர் பரப்பும் கொண்ட நீர்நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலை முழுமையாக அறிந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும். மாறாக, தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்பட்டால், மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். How can Chitteri Lake be given to private?

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பியூட்டி டிப்ஸ்: ஹேர் டை, ஹேர் கலரிங் செய்கிறீர்களா… இவற்றில் எல்லாம் கவனம் தேவை!

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share