வானில் வட்டமடித்த விமானம்: என்ன நடந்தது? எப்படி தரையிறக்கப்பட்டது?

தமிழகம்

திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட இடத்துக்கும் செல்ல முடியாமல், உடனடியாக தரையிறக்கவும் முடியாமல் வானிலேயே வட்டமடித்தது தேசிய அளவில் பரபரப்பை கிளப்பியது.

எப்போது விமானம் தரையிறங்கும், பயணிகள் பாதுகாப்பாக இறங்குவார்களா என இந்த சம்பவம் எல்லோரையும் நகம் கடிக்க வைத்துவிட்டது.

திருச்சியில் இருந்து நேற்று மாலை சரியாக 5.40 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.

போயிங் 737-800 ரக விமானத்தில் 141 பேர் பயணித்தனர். வானில் பறக்கத் தொடங்கியது. முதலில் லேண்டிங் கியர் எப்போதும் போல சரியாக வேலை செய்திருக்கிறது. பின்னர் சிஸ்டம் செயலிழப்பைக் குறிக்கும் காக்பிட் மாஸ்டர் எச்சரிக்கை ஒலி கொடுத்தது.

லேண்டிங் கியர் அல்லது அண்டர்கேரேஜைக் கட்டுப்படுத்தும் ஹைட்ராலிக் அமைப்பிலிருந்து ஆயில் வெளியேறியதை சென்சார்கள் கண்டறிந்ததாக என்டிடிவி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து விமானிகள் மீண்டும் திருச்சி விமான நிலையம் செல்ல முடிவு செய்தனர். விமானம் தரையிறங்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு எரிபொருள் தான் இருக்க வேண்டும்.

அந்தவகையில் முழு எரிபொருளோடு ‘ஓவர் வெயிட் லேண்டிங்’ செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தனர்.

அப்படிப்பார்த்தால் எலக்ட்ரானிக் ஃபுயல் சிஸ்டம் மூலம் எரிபொருளை வெளியேற்றுவார்கள். எரிபொருளை வெளியில் விட்டு, காற்றில் ஆவியாக்குவதற்கான சிறப்பு தொழில் நுட்பம் விமானத்தில் இருக்கும். இது ஒரு வகை. மற்றொன்று, வானில் இருக்கும் ரேஸ் ட்ராக்கில் வட்டமடித்து விமானத்தில் இருக்கும் எரிபொருளை குறைப்பார்கள்.

அதன்படிதான் புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, அன்னவாசல் முக்கணமலைப்பட்டி, கீரனூர், அம்மாசமுத்திரம் உள்ளிட்ட வான் பகுதிகளில் நேற்று ஏர் இந்தியா விமானம் சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் மேல் வட்டமடித்தது.

வானில் நீண்ட நேரம் விமானம் வட்டமடித்ததை பொதுமக்கள் அச்சத்துடன் பார்த்தனர். விமானி தரையிறங்குவதற்கு முன் 24 சிறிய சுற்றுகளையும், 3 பெரிய சுற்றுகளையும் சுற்றிவிட்டு ஏர் டிராபிக் கண்ட்ரோலருக்கு (ஏடிசி) தகவல் அளித்து, விமானத்தை தரையிறக்க தொடங்கினார்.

விமானம் இரவு 8.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை மீண்டும் நெருங்கியது. மெல்ல மெல்ல உயரத்தை குறைத்தார் விமானி. திட்டமிட்டப்படி 8.15 மணிக்கு ஓடுபாதையை தொட்டது விமானம். அப்போது Automatic deployment அதாவது தரையிறங்குவதற்கான கியரை தானியங்கி முறைக்குப் பதிலாக பைலட் குழுவே நேரடியாக இயக்கியிருக்கின்றனர்.

ஓடுபாதையை உரசியபடி நகர்ந்து கொண்டிருந்த விமானத்தை பார்த்து விமான நிலையத்தில் காத்திருந்த உறவினர்களும், குடும்பத்தினரும் பெரு மூச்சுவிட்டனர்.

தரையிறங்கும் போது லேண்டிங் கியர் எந்த பிரச்சினையும் இல்லாமல் சரியாக இயங்கியதாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதலில் ஹைட்ராலிக் பிரச்சினை காரணமாக பெல்லி லேண்டிங்கிற்கும் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. விமானத்தின் தரையிறங்கும் கியர் அமைப்பில் செயலிழப்பு அல்லது தோல்வி ஏற்பட்டால் இந்த பெல்லி லேண்டிங்கிற்கு அனுமதி வழங்கப்படும். அதாவது வீல் கீழே வராமல் விமானத்தை தரையில் உரசியவாறு தரையிறக்குவது. இது ஒருவகை எமெர்ஜென்சி லேண்டிங் ஆகும்.

ஒருவேளை இப்படி இறங்கியிருந்தால் நிச்சயம் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். இதுபோன்ற சூழலில் தான் முன்கூட்டியே விமான நிலையத்தில் 20 ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும் போது வீல் சரியாக இறங்கியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேறினர்.

திருச்சியில் இருந்து ஷார்ஜா 2400 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு விமானத்தில் சென்றால் 4 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படும்.  ஹைட்ராலிக் பிரச்சினையோடு நீண்ட தூரம் செல்ல முடியாது.  காற்றின் எதிர்ப்பு வேகம் காரணமாக சீராக பறப்பதில் பிரச்சினை ஏற்படும். இதனால், விமானம் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னதாகவும் எரிபொருள் காலியாகும் நிலை கூட நேரிடும். இந்த ஆபத்தை தவிர்க்கவே விமானம் கிளம்பிய இடத்திற்கே திருப்பிவிடப்படும்.

அதன்படிதான் திருச்சி ஏர் இந்தியா விமானமும் மீண்டும் விமான நிலையத்துக்கே திருப்பிவிடப்பட்டது.

இவ்வளவு தொழில்நுட்ப நுணுக்கங்களையும் சாதுர்யமாக கையாண்டு பாதுகாப்பாக தரையிறக்கி, எகிறிய பயணிகளின் ஹார்ட் பீட்டை நார்மலுக்கு கொண்டு வந்தனர் விமானிகள்.

இந்த விமானத்தை இயக்கிய இக்ரம் ஷானியல், மைத்ரேயி, சஞ்சிதா தேவி, வைஷ்ணவி சுனில் நிம்பல்கர், சஷி சிங், ஷாகித் திலீப் வதனா ஆகியோர் அடங்கிய விமானிகள் குழுவிற்கு நாடு முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதில் விமானத்தை இயக்கிய இக்ரம் ஷானியல் இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

இன்னும் பாடம் படிக்காத அரசு…ரயில் விபத்தால் கொந்தளித்த ராகுல்

நட்புக்கு வயது தடை கிடையாது… ரத்தன் டாடாவின் நண்பர் சாந்தனு யார்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *