கணவர் வாங்கும் உடைமைகளில் மனைவிக்கு சம உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1965ஆம் ஆண்டு நெய்வேலியில் கண்ணையன் நாயுடு – கம்சலா அம்மாள் ஆகியோர் திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலைப்பார்த்து வந்த கண்ணையன் 1983ஆம் ஆண்டு சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றார்.
குழந்தைகளுடன் நெய்வேலியிலேயே வசித்து வந்த கம்சலா அம்மாள் சவுதியில் இருந்து கணவர் அனுப்பிய பணத்தில் ஏராளமான சொத்துகளை தனது பெயரில் வாங்கியுள்ளார்.
சொத்துகளை அபகரித்து விட்டார்
11 ஆண்டுகள் கழித்து 1994ஆம் ஆண்டு நெய்வேலி திரும்பிய கண்ணையன், தனது சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்களை தனது மனைவி அபகரித்துள்ளார். மேலும் தான் சவுதியில் இருந்த சமயத்தில் மனைவி கம்சலா வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் மூலம் சொத்துகளை வாங்கும், விற்கும் வேலையில் ஈடுபட்டதாகவும் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் 1995ஆம் ஆண்டு மனுத்தாக்கலும் செய்தார் கண்ணையன். அதில், ”தனது வருமானத்தில் வாங்கிய உடைமைகளுக்கு உரிமை கொண்டாடும் தனது மனைவி கம்சலா அம்மாள் மற்றும் அவருடன் தொடர்பில் இருப்பவருக்கு நிரந்தரத் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
அந்த வழக்கில் சொத்துகள் அனைத்தும் கண்ணையனுக்கே சொந்தம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதனை எதிர்த்து கடலூர் கூடுதல் நீதிமன்றத்தில் கம்சலா அம்மாள் வழக்கு தொடர்ந்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சொத்துகளுக்கு கம்சலாவுக்கு சம உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தது.
உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு
இதற்கிடையே கடந்த 2015ஆம் ஆண்டு கண்ணையா இறந்ததை தொடர்ந்து, இந்த தம்பதியினரின் பிள்ளைகள் மூவரும் கூடுதல் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் தங்களது தாய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
அதேவேளையில் கம்சலா அம்மாளும் தனது கணவரின் சொத்துக்களில் சம பங்குக்கான உரிமையை கோரினார்.

இந்த மனுக்களின் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் முன்பு கடந்த ஜூன் 21ஆம் தேதி வந்தது.
மறைந்த கண்ணையன் மற்றும் குழந்தைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பார்த்தசாரதியும், கம்சலா அம்மாள் தரப்பில் வழக்கறிஞர் வி.அனுஷாவும் ஆஜராகி வாதாடினர்.
எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”கணவரின் சொத்தில் மனைவிக்கும் சம உரிமை உண்டு.
ஒரு இல்லத்தரசி எந்த இடைவெளியும் இல்லாமல் தினமும் வீட்டை நிர்வகிக்கும் வேலையைச் செய்கிறார். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அடிப்படை மருத்துவ உதவியை வழங்குவதன் மூலம் ஒரு மருத்துவரின் பணியையும் செய்கிறார்.
விடுமுறையே இல்லாமல் 24 மணி நேரமும் ஒரு இல்லத்தரசி மேற்கொள்ளும் பணியை, சம்பாத்தியத்திற்காக கணவன் பார்க்கும் எட்டு மணி நேர வேலையுடன் ஒப்பிட முடியாது” என்று நீதிபதி சுட்டிக்காட்டினார்.
மனைவிக்கு சமஉரிமை உண்டு
மேலும் அவர், “மனைவி குடும்பத்தைக் கவனிக்காமல் இருந்திருந்தால் கணவர் வேலை பார்த்து சம்பாதிக்க முடியாது. கணவனும், மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டை சக்கரங்கள்
இதன்மூலம் ஒரு இல்லத்தரசி தனது கணவர் வாங்கும் சொத்து மற்றும் சம்பாத்தியத்தில் சமமான பங்கைப் பெற தகுதி உடையவர் ஆகிறார்.
சொத்துகளானது கணவன் அல்லது மனைவி பெயரில் வாங்கப்பட்டிருக்கலாம். எனினும் கணவன்-மனைவி இருவரின் கூட்டு முயற்சியில் சேமிக்கப்பட்ட பணத்தில் வாங்கப்பட்டதாக தான் அது கருதப்படும்.
குடும்பத்தை கவனித்து, நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லத்தரசியின் பங்களிப்பை அங்கீகரிக்க இதுவரை சட்டம் இயற்றப்படவில்லை என்றாலும், அவர்களின் பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்த சட்டமும் தடை விதிக்கவில்லை.
அதன்படி சொத்துக்கள் அனைத்தும் கண்ணையனின் (கணவன்) சொந்த வருமானத்தில் வாங்கியிருந்தாலும், அதில் கம்சலா அம்மாளுக்கும் (மனைவி) ஐம்பது சதவீத உரிமை உண்டு என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்ப்பளித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
”அதிமுக ஆட்சியில் ’கலைஞர்’ கட்டிட பெயர்கள் மாற்றப்படும்”:ராஜன் செல்லப்பா