காய்கறி விலை, பருப்பு விலை, சிலிண்டர் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக ஹோட்டல் உணவுகள் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
காய்கறி விலை, மளிகை பொருட்களின் விலை, சிலிண்டர் விலை உயர்வோடு வணிக பயன்பாட்டுக்கான மின்சாரக் கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் கடும் சுமையை சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஹோட்டல் உணவுகள் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள சென்னை ஹோட்டல்கள் சங்கத் தலைவர் எம்.ரவி, “காய்கறி விலை உயர்வு, சமையல் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக ஹோட்டல் தொழில் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் இருப்பது போன்ற நிலைதான் தற்போதும் ஏற்பட்டிருக்கிறது. கட்டண உயர்வு, வரிகள் போன்றவற்றால் ஹோட்டல் தொழிலை நடத்த முடியாத நிலையில் உள்ளோம். தற்போது மதிய சாப்பாட்டின் விலை 100 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரையில் இருக்கிறது.
காய்கறி விலை, பருப்பு விலை, சிலிண்டர் விலை, மின் கட்டண உயர்வு போன்றவற்றின் காரணமாக இதே விலைக்கு சாப்பாட்டை கொடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
பல ஹோட்டல் உரிமையாளர்கள் ஹோட்டலை மூடிவிட்டு வேறு தொழிலுக்குச் சென்று விடக் கூடிய சூழ்நிலை உள்ளது. இது போன்ற விலை உயர்வு காரணமாக 100 சதவிகிதம் அளவுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் ஏற்படும் சுமை எங்களை மட்டுமே பாதிக்காது, பொதுமக்களையும் கண்டிப்பாக பாதிக்கும். நிலைமை இப்படியே சென்றால் ஹோட்டல் உணவு வகைகளின் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே ஹோட்டல் உரிமையாளர்களின் சிரமத்தைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்!