சூரி உணவகம் ரெய்டு: அமைச்சர் மூர்த்தி விளக்கம்!

தமிழகம்

நடிகர் சூரி உணவகத்தில் நடைபெற்ற சோதனையில் அமைச்சர் மூர்த்தி பெயர் அடிபட்ட நிலையில் அதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 29) விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குபவர் சூரி. இவர், மதுரையில் தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ் லைன் சந்திப்பு, ஊமச்சிகுளம், நரிமேடு, ஒத்தக்கடை, சுந்தர்ராஜன்பட்டி, விமான நிலையம் அருகில் எனப் பல இடங்களில் சொந்தமாக ’அம்மன் உணவகம்’ என்ற பெயரில் ஹோட்டல்கள் நடத்தி வருகிறார். இந்த உணவகங்களின் நிர்வாகத்தை சூரியின் சகோதரர்கள் கவனித்து வருகின்றனர்.

இதில் மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள காமராஜர் சாலையில் இயங்கிவரும் சூரிக்குச் சொந்தமான அம்மன் உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி இல்லாமல் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிகவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் நடத்திய விசாரணையில், உணவகத்திற்காக வாங்கப்பட்ட பொருட்களுக்கு முறையாக ஆவணங்கள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் வணிகவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சூரி உணவகத்தில் திடீரென வணிகவரித் துறையினர் சோதனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூரியின் உணவகத்தில் சோதனை நடத்தியதற்கு அமைச்சர் மூர்த்திதான் காரணம் எனப் பேசப்பட்டது. மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ஓர் அணியாகவும், வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றொரு அணியாகவும் செயல்படுகின்றனர்.

இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் பனிப்போர் நடைபெற்று வருகிறது என மதுரைவாசிகள் புகார் வாசிக்கின்றனர். இந்த நிலையில்தான், சூரியின் உணவகத்தை கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி அமைச்சர் பி.டி.ஆர். திறந்துவைத்ததன் காரணமாக, அமைச்சர் மூர்த்தியின் பேரில் இந்த சோதனை நடைபெற்றதாகப் பேசப்பட்டது. இதுதொடர்பாக நம்முடைய மின்னம்பலத்தில், ’சூரி ஹோட்டல் ரெய்டு: மதுரை அமைச்சர்கள் காரணமா?’ என கடந்த செப்டம்பர் 21ம் தேதி கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது.

hotel actor sooris restaurant minister moorthy answer

இந்த நிலையில் நடிகர் சூரி உணவகத்தில் சோதனை நடத்தப்பட்டதற்கும் தமக்கும் எந்த சம்பந்தமுமில்லை என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 29) மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”நடிகர் சூரி உணவகத்தில் நான் திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டதுபோல தவறான செய்திகளைச் சிலர் பரப்பி வருகின்றனர். அவர் (பி.டி.ஆர்.) திறந்தார்; நான் ரெய்டு நடத்தினேன் எனச் சொல்வதெல்லாம் கேலிக்கூத்தாக இருக்கிறது.

இந்த விஷயத்தில் வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையீடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்படவில்லை. வணிகவரித் துறைக்கு முழு அதிகாரம் உள்ளது.

அவர்கள், போலியாக ஏமாற்றுபவர்கள், அரசுக்கு ஜி.எஸ்.டியைச் செலுத்தாத வணிகர்களைக் கண்டுபிடித்து நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அப்படி, நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசு தரப்பில் வழங்கப்பட்டிருக்கிறது. இது, ஒன்றும் புதிதல்ல. அதன்படி, யார் எவர் என்று பார்க்காமல், ஏற்றத்தாழ்வு இல்லாமல் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார் அமைச்சர் மூர்த்தி.

ஜெ.பிரகாஷ்

அரசு முடிவு ஏமாற்றமளிக்கிறது : திருமாவளவன் அதிருப்தி!

“உங்க அப்பன் வீட்டு சொத்தா?”: பொன்முடியை சாடிய எடப்பாடி

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *