கனமழை எதிரொலியாக இன்று (அக்டோபர் 15) ஒரேநாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் சென்னையிலுள்ள அனைத்து காய்கறி சந்தைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் நேற்று இரவு பெருமளவில் மக்கள் குவிந்தனர். அரசு தரப்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தி வந்ததால் கிலோ கணக்கில் தங்களது வீட்டிற்கு தேவையான காய்கறி, மசாலா, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமோதினர்.
இதனால் நேற்று இரவே பல இடங்களில் தக்காளி, கேரட், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதுதொடர்பாக பொதுமக்களும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை விற்பனைக்கு வந்த காய்கறிகளின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரே நாளில் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. நேற்று 50 ரூபாய் – 80 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 80 ரூபாய் – 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், வெங்காயம் ரூ.40 முதல் ரூ.60க்கும், கேரட் ரூ.60 முதல் ரூ.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆறுதலாக நேற்று ரூ.30 முதல் ரூ.50 வரையில் விற்பனையாகி வந்த உருளைக்கிழங்கு, இன்று விலை குறைந்து ரூ.30 முதல் ரூ.36 வரையில் விற்பனையாகிறது.
விலை உயர்வுக்கு தக்காளி அதிகம் பயிரிடக் கூடிய தமிழக உள்மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக வரத்து குறைவு என கூறப்படும் நிலையில், மக்களும் அதிகளவில் வாங்கி வருவதே முக்கிய காரணம் என்கின்றனர் வியாபாரிகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் 8 : அடுத்த ரவீந்தர் ஆகும் முத்துக்குமரன்?
என்எல்சி: போனஸ் பேச்சு வார்த்தை தோல்வி: தொடர் போராட்டம் அறிவிப்பு!