சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கோகுல்ராஜ் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜூக்கு மதுரை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்தது. இதனையடுத்து 2022 மார்ச் 9 ஆம் தேதி முதல் யுவராஜ் கோவை மத்திய சிறையில் இருந்து வருகிறார்.
கோவை சிறையில் முன்பு இருந்த சிறை அதிகாரிகள் பழைய சட்ட விதிகளை வைத்து யுவராஜ்-க்கு முதல் வகுப்பிற்கான சிறப்பு சலுகைகள் வழங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் அதிகாரிகள் மாறி, புதிய அதிகாரிகள் வந்த பிறகு அதனைக் கண்டுபிடித்து, யுவராஜ்-க்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருவதை நிறுத்தி விட்டனர்.
கோவை மத்திய சிறையில் 2376 கைதிகள் இருக்கிறார்கள். இதில் தண்டனைக் கைதிகள் 1072 பேர் இருக்கிறார்கள். யுவராஜ் 11 வது பிளாக்கில் இருந்து வருகிறார். இந்த நிலையில் யுவராஜ்-க்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்க வலியுறுத்தி அவரது மனைவி சுவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், யுவராஜின் சமூக அந்தஸ்து மற்றும் அவரது கல்வித் தகுதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு முதல் வகுப்பு சிறை ஒதுக்க உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் இன்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தது.
அப்போது, யுவராஜ் சார்பில் வழக்கறிஞர் எஸ்.காசிராஜன் ஆஜரானார். தங்களது மனுவை முறையாகப் பரிசீலிக்காமல் ஆட்சியர் பரிந்துரைப்படி சிறை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி, மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த மனுவின் மீது, சிறை நிர்வாகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 29ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள யுவராஜ்-க்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி கோவை சிறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும் சிறை நிர்வாகமும் சிறையில் முதல் வகுப்பு கொடுப்பதற்கு யுவராஜ் தகுதியில்லாதவர் என்று பதிலளிக்க சட்ட நிபுணர்களோடு ஆலோசனை செய்து வருகிறார்கள்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6 மணிக்கு மேல அத பண்ண முடியாதாம் : அப்டேட் குமாரு
மீண்டும் உதயநிதி… ஈரோடு சென்ற பின்னணி!
இறுதிக்கட்ட பரப்புரை : ரோடு ஷோவில் வாக்கு சேகரித்த பன்னீர்