தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்துள்ளதால், சென்னை நகர் மட்டுமின்றி தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் திங்கள் கிழமை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முந்தைய இரு நாட்களான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளும் விடுமுறை நாட்கள் என்பதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறை தினம் வருகிறது.
எனவே தீபாவளியை சொந்த ஊரில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கொண்டாட சென்னையில் வேலை செய்பவர்கள் இன்று முதலே கிளம்பிய வண்ணம் இருக்கின்றனர்.
கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், மெப்ஸ், பெருங்களத்தூர் ஆகிய பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பெருங்களத்தூரை கடந்துதான் செல்ல வேண்டும்.
இதனால் மாலை முதலே பெருங்களத்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பயணிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வாகன நெரிசலை சரி செய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டிருந்தாலும் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்பதை காண முடிகிறது.
பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் பெருங்களத்தூர் தொடங்கி பரனூர் டோல்கேட் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமானதுதான் என்பதால் ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலை வழியாக செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் வழியாக சென்று தேசிய நெடுஞ்சாலையை அடையலாம் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்தசூழலில், ட்விட்டரிலும் பெருங்களத்தூர் போக்குவரத்து நெரிசல் குறித்து பயணிகள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
13 வருட ஏக்கம் தணிந்தது: வெஸ்ட் இண்டீஸை வீட்டுக்கு அனுப்பிய அயர்லாந்து அணி!
கேதர்நாத்தில் மோடி : என்னென்ன திட்டங்கள்?