முக்கனிகளின் முதன்மையானது மாம்பழம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் உற்சாகமடையச் செய்யும் மாயாஜாலக் கனியான மாம்பழத்தில் ஸ்குவாஷ் செய்து கோடையைக் குளுமையாகக் கொண்டாடலாம். நாவிலே இனிமையாய்ப் படரும் இதன் சுவை மன மகிழ்ச்சியை அளிக்கும்.
என்ன தேவை?
பங்கனப்பள்ளி மாம்பழ விழுது – ஒரு கப்
சர்க்கரை – ஒன்றரை அல்லது 2 கப் (மாம்பழம் சிறிது புளிப்பாக இருந்தால், 2 கப் சர்க்கரை தேவை)
தண்ணீர் – முக்கால் கப்
சிட்ரிக் ஆசிட் – 2 டீஸ்பூன்
மேங்கோ எசென்ஸ் – அரை டீஸ்பூன்
மஞ்சள் ஃபுட் கலர் – தேவைப்பட்டால் சிறிதளவு
சாறு எப்படி எடுப்பது?
சதைப்பற்றான (பங்கனப்பள்ளி) மாம்பழத்தை தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து, ஒரு அடி அடித்துக் கொள்ளவும்.
ஸ்குவாஷ் செய்வது எப்படி?
ஒன்றரை கப் சர்க்கரையில் முக்கால் கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும். இத்துடன் சிட்ரிக் ஆசிட் சேர்க்கவும். கலவை வெதுவெதுப்பாக இருக்கும்போதே அரைத்த மாம்பழ விழுது சேர்த்து கரண்டியால் நன்கு கரைத்து விடவும். கட்டிகள் இருந்தால் ஆற வைத்து மிக்ஸியில் ஊற்றி, ஒரு சுழற்று சுழற்றினால் சரியாகி விடும். தேவையானால் ஃபுட் கலர் சேர்க்கவும். இந்தக் கலவையுடன் எசென்ஸ் சேர்த்து பாட்டிலில் நிரப்பவும்.
ஜூஸ் கலக்குவது எப்படி?
கால் பங்கு ஜூஸ், அரை அல்லது முக்கால் பங்கு தண்ணீர் சேர்த்து, ஐஸ் கட்டி சேர்த்து பருகவும்.
குறிப்பு:
இந்த ஸ்குவாஷ் சில மாதங்கள் ஆனாலும் கெடாது. தேவைப்படும்போது சிறிது தண்ணீருடன் கலந்து அருந்தினால் அருமையான ஜூஸ் ரெடி.