தமிழ்நாடு உள்துறை செயலாளருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அபராதம் விதித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த ராஜலட்சுமி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.
அதில், “பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த நான் எனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தவளைகுளம் பகுதியில் வசித்து வருகிறேன்.
எங்கள் பகுதியில் வசிக்கக் கூடிய வேலுச்சாமி 2020 டிசம்பர் மாதம் எனது ஏழு வயது மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினார் .
இதுகுறித்து பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு ராமநாதபுரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றவாளிக்கு ஏழு வருடச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. எனது மகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
2022 மார்ச் மாதம் ஒரு மாத காலத்துக்குள் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்துறை செயலாளருக்கு மனு அனுப்பினோம்.
ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் குடும்பம் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் ராமநாதபுரம் நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு லட்சத்தை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 22) நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் சார்பில், ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி உடனடியாக இழப்பீட்டுத் தொகையை ஆறு சதவிகித வட்டியுடன் வழங்க உத்தரவு பிறப்பித்தார்.
அதோடு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தத் தாமதம் செய்ததாக உள்துறை செயலாளருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
பிரியா
ஆய்வறிக்கைகளே முக்கியம்: திட்டக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் வலியுறுத்தல்!
“இதெல்லாம் கேவலமான செயல்” : சாய் பல்லவி காட்டம்!
அருணாச்சல் வீரர்களுக்கு மறுப்பு : சீன பயணத்தை ரத்து செய்த அமைச்சர்!
துக்க நிகழ்ச்சிகளில் வரம்பு மீறும் ஊடகங்கள்: நடிகர் சங்கம் கண்டனம்!