பீட்சா சாப்பிடுவதையே லட்சியக் கனவாக வைத்து, அதற்காக கரி பொறுக்கி விற்று, சிறுகச் சிறுகக் காசு சேர்த்து, பீட்சா சாப்பிட கடைக்குப் போகும் சிறுவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் காக்கை முட்டை.
அந்தப் படத்தின் இறுதியில் அந்தச் சிறுவர்களுக்குப் பாட்டி சுட்டுத்தரும் தோசையே, பீட்சாவைவிட சிறந்ததாக அமையும். அந்த வகையில் இந்த பேபி பீட்சா தோசையை நீங்களும் வீட்டிலேயே செய்து அசத்தலாம். கடையில் வாங்கும் பீட்சாவை விட சுவையாக இருக்கும்.
என்ன தேவை?
தோசை மாவு – அரை கிலோ
பேபி கார்ன் – அரை கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்)
மூன்று கலர் குடமிளகாய் – தலா ஒன்று (பொடியாக நறுக்கவும்)
துருவிய மொசரல்லா சீஸ் – சிறிதளவு
சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன்
ஓரிகானோ – ஒரு டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பேபி கார்னை வேகவைத்து மெல்லிய வட்டமாக நறுக்கி வைக்கவும். தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி, சிம்மில் வைக்கவும். ஒரு சின்ன கரண்டி தோசை மாவெடுத்து, உள்ளங்கை அளவிலான ஊத்தப்பமாக தோசைக்கல்லில் ஊற்றவும். மாவு வேகும் முன் அதன் மேல் வெங்காயம், பேபி கார்ன் ஸ்லைஸ்கள், குடமிளகாயை வைக்கவும்.
தோசையைத் திருப்பிப் போட்டு அதைச் சுற்றி ஒரு சொட்டு எண்ணெய் விட்டு வேக விடவும். இதை அப்படியே பிளேட்டுக்கு மாற்றவும். இனி தோசையின் மேல் சீஸ் தூவி அது உருகும் நேரத்தில், சில்லி ஃப்ளேக்ஸ் மற்றும் ஓரிகானோவைச் சேர்க்கவும். இதை 2 நிமிடம் கழித்து லஞ்ச் பாக்ஸில் வைத்து குழந்தைகளுக்குக் கொடுத்து விடவும். மதியம், ஆனந்தமாக சுவைத்து மகிழ்வார்கள்.