ராமேஸ்வரம் வரும் பக்தர்கள் புனித தீர்த்தத்தில் குளிக்க வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என மதுரை உயர்நீதிமன்றம் இன்று மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடல் மற்றும் புனித தீர்த்தங்களில் மக்கள் வழிபட்டு புனித நீராடுவது வழக்கம். ஆனால் அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதாக இராமநாதபுரத்தைச் சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் பொது நல மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ”ராமேஸ்வரத்தில் பழமையான சிவன் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள தீர்த்தங்கள் கங்கை தீர்த்தத்துக்குச் சமமானது.
மேலும், கோவிலுக்கு உள்ளே, வெளியே என மொத்தமாக 64 தீர்த்தங்கள் உள்ளன. அக்னி தீர்த்தம் என்பது கோவில் வெளியே உள்ள கடலை குறிக்கும். இந்த தீர்த்தங்களில் கழிவுநீர் கலப்பது மற்றும் குப்பைகள் கொட்டுவதை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
ராமேஸ்வரத்தில் பாதாளச் சாக்கடை அமைக்க 52.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் பணிகள் நடைபெறவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பொதுநல மனு இன்று (அக்டோபர் 26) உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அக்னி தீர்த்த கடலில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் புனித தீர்த்தத்தில் நீராட வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர், நகராட்சி நிர்வாகம், கோவில் இணை ஆணையர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மோனிஷா
என்ஐஏ விற்கு கைமாறிய கோவை கார் வெடிப்பு வழக்கு
கேரள ஆளுநர் – முதல்வர் உச்சகட்ட மோதல்!