மகளிர் தினத்துடன் இன்று(மார்ச் 8) நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வண்ணங்களின் திருவிழா என அழைக்கப்படும் ஹோலி திருவிழா வட இந்தியர்களின் முக்கிய பண்டிகை ஆகும். விஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரணிய வதம் புரிந்ததைக் குறிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதாக ஆன்மிக வரலாறுகள் கூறுகின்றன.
அதோடு, கிருஷ்ணர், ராதா மீது வண்ணப் பொடிகளைத் தூவி விளையாடியதும் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. பனி காலத்துக்கு விடை கொடுத்துவிட்டு வெயில் காலத்தை வரவேற்கும் விதமாகவும் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு, இந்தியா ,வெளி நாடுகளிலும் வசிக்கும் வடஇந்தியர்கள் இந்த பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். காலப்போக்கில் இந்த பண்டிகை தமிழர்கள் உட்பட அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியுள்ளது.
இந்த ஆண்டு ஹோலியை முன்னிட்டு தமிழகத்தில் வேலை செய்த வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குக் கிளம்பினர். சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கேயே ஹோலியை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி பண்டிகை களைகட்டியுள்ளது.
சவுகார்பேட்டையில் உள்ள தெருக்களில் கூடிய இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணங்களைப் பூசிக்கொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.
வாழ்த்துகளையும், இனிப்புகளை அவர்கள் பரிமாறிக்கொண்டனர். இந்த பகுதியில் வடஇந்தியர்கள் மட்டுமின்றி பிற பகுதியிலிருந்து வந்த தமிழக இளைஞர்கள், கல்லூரி மாணவர்களும் ஹோலியை கொண்டாடினர்.
திருப்பூர் பகுதியில் ராயபுரம், காதர்பேட்டை, ஸ்டேட் பாங்க் காலனி, உள்ளிட்ட பகுதிகளிலும் வடமாநிலத்தவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இணைந்து ஹோலி கொண்டாடினர்.
ஈரோடு மாநகரில் கருங்கல்பாளையம், கே.எஸ்.நகர் திருநகர் காலனி, வளையக்கார வீதி, அக்ரஹார வீதிகளிலும் வடமாநிலத்தவர்கள் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவையில் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வடமாநிலத்தவர்கள் வண்ணங்களைப் பூசி ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரியா
உலக மகளிர் தினம்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்!
“ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க ஆதார் எண் பெறப்பட்டதா?”