சாதி பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேசியக் கொடி ஏற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
வரும் 15-ம் தேதி 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தலைமைச் செயலகம் முதல் கிராம ஊராட்சிகள் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் கொடியேற்றுவது வழக்கம்.
ஆனால் சில இடங்களில் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் கொடியேற்ற அனுமதிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் சாதிய பாகுபாடு காரணமாக ஒரு சில கிராம ஊராட்சிகளில் தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் அதேபோன்று தேசிய கொடியையோ அல்லது அதனை ஏற்றுபவரையோ அவமதிக்கும் செயலும் நிகழலாம் என்றும் தகவல் வெளியாகி இருப்பதாகக் கூறியுள்ளார். பட்டியல், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்களை அவர்களது சாதியை காரணம் காட்டி தேசிய கொடி ஏற்றவிடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறியுள்ள தலைமைச் செயலாளர் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் அவற்றின் தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்யவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார். கொடியேற்றுவதில் பிரச்சினை இருப்பின் போலீஸ் பாதுகாப்பை வழங்குமாறும் அவர் கூறியிருக்கிறார். மேலும் சுதந்திர தினத்தன்று கொடியேற்றியது தொடர்பான அறிக்கையை ஆகஸ்ட் 17-க்குள் ஆனுப்பி வைக்குமாறும் ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி எது?