300 ஆண்டுகளில் இல்லாத மழை… வெள்ளக்காடான கிருஷ்ணகிரி
ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே நவம்பர் 30-ஆம் தேதி கரையைக் கடந்தது.
இந்தப் புயலானது நேற்று (டிசம்பர் 1) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 50 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
ஊத்தங்கரை பேருந்து நிலையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அதனை மீட்கும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், தங்கள் வீடுகளுக்குள் புகுந்த நீரை மாவட்ட நிர்வாகம் வெளியேற்ற வேண்டும் எனக் கோரி, கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சுமார் ஒன்றரை மணி நேரமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அதி கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப் ஜான் இது தொடர்பாக கூறுகையில் ” கடந்த 300 ஆண்டுகளில் இல்லாத வகையில், கிருஷ்ணகிரியில் கனமழை பெய்துள்ளது.
மேலும், கிருஷ்ணகிரி ஊத்தங்கரையில் 50.3 செ.மீ, ஜம்புகுட்டப்பட்டியில் 25 செ.மீ, பரூரில் 20 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வாரத்தின் முதல் நாளே குறைந்த தங்கம் விலை… இன்று சவரன் எவ்வளவு?
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மலைச்சரிவு… 16 மணி நேரமாக ஐந்து பேர் சிக்கித்தவிப்பு!