historic rainfall in tirunelveli thoothukudi

தென் மாவட்டங்களை உலுக்கும் கனமழை… முப்படைகளின் உதவி கோரியது தமிழக அரசு!

தமிழகம்

தென் மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழையால், மீட்பு பணிகளுக்காக முப்படைகளின் உதவி தேவை என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக தென் மாவட்டங்களில் கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகபட்ச மழை கொட்டித்தீர்த்து வருகிறது.

அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியில் உச்சபட்சமாக 95 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

இதேபோல திருச்செந்தூரில் 69 சென்டி மீட்டர்,  பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் 62 சென்டி மீட்டர், கோவில்பட்டி பகுதியில் 53 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

அதேபோல திருநெல்வேலி மாவட்டத்தில் மூலக்கரைப்பட்டி பகுதியில் 61 சென்டி மீட்டர் , மாஞ்சோலை பகுதியில் 55 சென்டி மீட்டர், ஊத்து பகுதியில் 50 சென்டி மீட்டர், பாளையங்கோட்டை பகுதியில் 44  சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக மையிலாடி பகுதியில்  30 செனாடி மீட்டர் மழை பொழிந்துள்ளது. தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை குண்டர் அணையில் 51 சென்டி மீட்டரும், செங்கோட்டை, கருப்பநதி அணை பகுதிகளில் 30 சென்டி மீட்டரும் பெய்துள்ளது.

வரலாறு காணாத இந்த பெருமழையால் குளங்கள், ஏரிகள் உடைந்து ஊரே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தற்போது தமிழக அரசு மேற்கண்ட 4 மாவட்டங்களில் மீட்பு பணிகளை துரிதமாக முடுக்கி விட்டுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு படகுகள் மூலம் உணவு பொருட்களை வழங்கியும், அவர்களை பாதுகாப்பாக அருகில் உள்ள நிவாரண மையங்களில் தங்க வைத்தும் தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்டங்களில் பெய்துள்ள இந்த வரலாறு காணாத கனமழையால் மீட்பு பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் உதவி கோரப்பட்டு உள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ” அருகில் உள்ள திருச்சி, கோவை, மதுரை மாவட்டங்களில் இருந்து தேவையான உணவு பொருள்களை கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ளோம். படகு மூலம் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.

படகினை லாரியில் தான் எடுத்து செல்ல முடியும். ஆனால் லாரிகளையும் சில பகுதிகளில் தற்போது இயக்க முடியவில்லை. அதுபோல இடங்களில் டிராக்டர், ஜேசிபி போன்ற வாகனங்களை பயன்படுத்தி மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

தேசிய மீட்பு குழுவினர் 200 பேரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 225 பேரும் தற்போது களத்தில் உள்ளனர். இவர்கள் தவிர தீயணைப்பு துறையினரும் களத்தில் இருக்கின்றனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

மருத்துவமனைகளில் மின்சார பிரச்சினைகள் வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். அதற்காக டீசல், ஜெனரேட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்ட மருத்துவமனையின் தரைத்தளத்தில் நேற்று (டிசம்பர் 17) தண்ணீர் வந்து விட்டது.

உடனடியாக அவர்களை முதல் மாடியில் உள்ள அறைகளுக்கு மாற்றினோம். இவ்வளவு பெரிய மழையினை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அனைத்து சூழ்நிலைகளுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். மீட்பு பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் உதவியும் கோரப்பட்டுள்ளது,” என்றார்.

அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கும் மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

கனமழை: தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து!

தமிழகமெங்கும் மழை… வறட்சியில் சிவகங்கை…  லாரியில் பயிர்களுக்குத் தண்ணீர்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *