“நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேட்டில், எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும்” என அறப்போர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தது. அதன் முதற்கட்ட நடவடிக்கையாக திருச்சி கண்காணிப்பு பொறியாளராக இருந்த பழனி, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கண்காணிப்பு பொறியாளர் பழனி இடைநீக்கம் செய்யப்பட்டதை வரவேற்றிருக்கும் அறப்போர் இயக்கம், இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் நேற்று (ஜூலை 30) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”நெடுஞ்சாலை துறையில் 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் டெண்டர் போடப்பட்டு இன்றுவரை செயல்படுத்தப்படும் தஞ்சாவூர், சிவகங்கை Performance Based maintenance Contract, AB CRISM contract, கோவை உக்கடம் பாலம் ஒப்பந்தம் போன்றவற்றில் நடந்த முறைகேடுகளை ஆதாரத்துடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறை, தலைமை செயலர் மற்றும் நெடுஞ்சாலை துறை செயலர் ஆகியோரிடம் புகாராகக் கொடுத்துள்ளது.
மேலும், இந்த டெண்டர் திறப்பதற்கு முன்பே யாருக்கு டெண்டர்கள் முடிவு (FIXING ) செய்யப்பட்டுள்ளது எனக் கூறி அறப்போர் இயக்கம் அப்போதைய நெடுஞ்சாலை துறை செயலருக்கு கடிதம் அனுப்பியது. ஆனால் அதை மீறியும் 4 டெண்டர்கள் வழங்கப்பட்டது. அந்த ஆதாரத்தின் அடிப்படையில், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்ததன் ஆதாரம், எஸ்டிமேட் அதிகப்படுத்தப்பட்டு இதனால் ரூ 692 கோடி இழப்பு ஏற்படுத்தியதன் ஆதாரம் என அனைத்தும் புகாருடன் கொடுத்துள்ளோம்.
இதில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை கோரி உள்ளோம். முக்கியமாக இந்த நெடுஞ்சாலை துறை ஒப்பந்தங்களில் வெற்றி பெற்ற KCP Engineers Pvt Ltd, SPK & Co மற்றும் அவர்களைச் சார்ந்த நிறுவனங்களை தற்போது வருமான வரித்துறை சோதனை செய்து 500 கோடிக்கு போலி செலவினங்கள் காண்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இவையும் விசாரிக்க கோரி உள்ளோம். அடுத்தகட்டமாக மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதும் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணை மேற்கொள்வதும் அத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு இதில் என்ன என்பதை விசாரிப்பதும் மிக அவசியம். புகாரையும் அதன் ஆதாரங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்
டெட்பாடி பளனிச்சாமி மைன்ட் வாய்ஸ்.. அக்கப்போர் இயக்கம்பா இவிக🤣🤣