பாலியல் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தக் குழு அமைப்பது குறித்து கலாஷேத்ரா நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையின் கலாச்சார அடையாளமாகத் திகழ்ந்த கலாஷேத்ராவில் பல வருடங்களாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வருவதாக அங்குப் பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கலாஷேத்ரா கல்லூரியின் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக விசாரிக்க கல்லூரி நிர்வாகம் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
ஆனால் இந்த விசாரணை குழுவில் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் இடம் பெறக் கூடாது எனவும், குழுவில் மாணவிகளின் பிரதிநிதிகள், பெற்றோரின் பிரதிநிதிகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்றும் கல்லூரி மாணவிகள் ஏழு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், “கல்லூரியில் மாணவிகளுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர கலாஷேத்ரா அறக்கட்டளை தவறிவிட்டது. பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவும் கலாஷேத்ரா தவறிவிட்டது. மாணவிகளின் புகார் மீது விசாரணை நடத்த அக்கறை காட்டாதது பாரபட்சமானது.
பாலியல் தொல்லை குற்றச்சாட்டு குறித்து மாணவிகள் புகார் அளித்துள்ள நிலையில், தானாக முன்வந்து விசாரணை நடத்த குழுவை அமைத்தது சட்டவிரோதமானது.
புகார் அளித்த மாணவிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என கலாஷேத்ராவுக்கு தடை விதிக்கவேண்டும். பாலியல் தொல்லைகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள் விசாரணைக் குழுவில், மாணவிகள் மற்றும் பெற்றோரின் பிரதிநிதிகளை சேர்த்து மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தங்களது அடையாளம் வெளியில் தெரியாமல் வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் மாணவிகள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கு விசாரணை
மாணவிகள் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு இன்று (ஏப்ரல் 17) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, ”, வெறும் கண்துடைப்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு மாற்றியமைக்கப்படவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
கலாஷேத்ரா தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ”சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புகாரளித்த மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது” என உறுதியாக பேசினார்.
தொடர்ந்து, “பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கல்லூரி நிர்வாகத்தில் தலையிடவோ, வளாகத்திற்குள் நுழையவோ அனுமதியில்லை” என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மாநில மகளிர் ஆணையம் நடத்திய விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குற்ற வழக்குப் பதியப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
கலாஷேத்ராவிற்கு நீதிபதி உத்தரவு
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ”கலாஷேத்ரா நடவடிக்கையில் மாணவிகள் திருப்தியடையவில்லை. பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழுவை உயர்நீதிமன்றம் நியமிப்பது தொடர்பாக கலாஷேத்ரா விளக்கம் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
மேலும், புகார் அளித்த மாணவிகளின் அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது எனவும் பாதிக்கப்பட்ட மாணவிகள், சாட்சிகளாக உள்ள மாணவிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கூடாது. பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மாணவிகளை தொடர்பு கொள்ளக்கூடாது எனவும் உத்தரவிட்டார்.
மேலும், மகளிர் ஆணைய விசாரணை அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஏப்ரல் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மோனிஷா
பல் பிடுங்கிய பல்பீர் சிங் மீது வழக்குப்பதிவு!
இளையராஜா இசையில் ’ஸ்ரீ இராமானுஜர்’ படம்!
Comments are closed.