தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது. முதல்கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்று மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த தொகைக்குக் கூடுதலாக கல்லூரி கட்டணம் வசூலித்தால் தமிழ்நாடு அரசுக்குப் புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன்படி, கடந்த கல்வியாண்டில் பல சுயநிதிக் கல்லூரிகள் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிப்பதாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து பல புகார்கள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் செந்தில் குமார் அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அதில், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதல்களை அனைத்து கல்லூரிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மேலும், இதுதொடர்பாக மாணவர்களிடம் இருந்து எழுத்துப்பூர்வமான புகார்கள் கிடைத்தால், அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும் என்றும் கல்லூரிக்கான இணைப்பு அங்கீகாரம் திரும்பப் பெறுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி எது?
ஆளுநர் மீது புகார்களை அடுக்கிய திமுக, கூட்டணி கட்சிகள்!