வழக்கு ஒன்றில் பெண் மனுதாரரிடம் பண்பற்ற முறையில் வழக்கறிஞர் கேள்வி எழுப்பியதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில், பாகப்பிரிவினை தொடர்பான வழக்கு ஒன்று விசாரணையில் இருந்தது.
முதல் மனைவிக்கு பிறந்த 3 பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கேட்டு வழக்கை தொடர்ந்திருந்தனர்.
அப்போது எதிர் மனுதாரராக இருந்த, அந்தப் பெண்களின் தந்தையின் 2 ஆவது மனைவியின் மகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குறுக்கு விசாரணையின் போது,
மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகாத முறையில் கேள்வி கேட்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்டது.
மாவட்ட நீதிமன்றத்திலேயே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நீதிபதி பரத சக்கரவர்த்தி தெரிவித்தார்.
மேலும், மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் பெண்கள் தங்களது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும்போது அவர்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் கேள்விகள் இருக்கக்கூடாது எனவும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அறிவுறுத்தியுள்ளார்.
கலை.ரா