சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரின் மகன் நாவரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரியுள்ள நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன்னுசாமியின் மகன் நாவரசு கடந்த 1996- ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலையில் மருத்துவம் படித்து கொண்டிருக்கும் போது ராக்கிங் கொடுமையால் கொல்லப்பட்டார். போலீசார் அதே கல்லூரியில் படித்த சீனியர் மாணவர் ஜான் டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
தண்டனையை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது. தொடர்ந்து, தலைமறைவாக இருந்த ஜான் டேவிட் சரணடைந்தார். இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், தனது மகனை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரி ஜான் டேவிட்டின் தாய் எஸ்தர் தமிழக அரசிடம் முறையிட்டார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே, ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரையை தமிழக அமைச்சரவை ஏற்றுக் கொண்டு ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், திட்டமிட்டு கொடூரமான முறையில் மருத்துவ மாணவரை கொலை செய்துள்ளதால் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என ஆளுநர் மறுப்பு தெரிவித்து விட்டார். எனினும், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்படுவார் என்பதால் திருநாவுக்கரசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
400 கோடி அரசு நிலம் அபகரிப்பு : அறப்போர் இயக்கத்திடம் சிக்கிய அமைச்சர் யார்?
வேலைவாய்ப்பு: எம்ஆர்பி-இல் பணி!