பணம் வசூலிப்பதே கல்லூரியின் நோக்கம்: நீதிமன்றம் அபராதம்!

தமிழகம்

அனுமதியில்லாமல் மாணவர்களைச் சேர்த்த விவகாரத்தில் கல்வியியல் கல்லூரிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து  உத்தரவிட்டுள்ள  உயர் நீதிமன்றம் மாணவர்களிடம் பணம் வசூலிப்பதே கல்லூரி நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.  

விருதுநகர் கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி செயலர் ஸ்ரீதரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், ‘எங்களது கல்வியியல் கல்லூரிக்கு 2021-2022-ஆம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி வகுப்பு நடத்தவும், கல்லூரி மாணவர்கள் 2021- 2022 ஆண்டுக்கான முதல் மற்றும் இரண்டாம் பருவத்தேர்வு எழுத அனுமதி வழங்கவும் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி சி.வி.கார்த்திகேயன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில்,

‘கல்வியியல் கல்லூரியில் பல்வேறு குறைபாடுகள் இருந்ததால் நாக் (National Accounts Classification Committee  – NACC) குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் 2021-இல் அனுமதியைத் திரும்ப பெற்றது.

இதை எதிர்த்து கல்லூரி சார்பில் மனு தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் கல்லூரிக்கு அனுமதியில்லாத நிலையில் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பி.எட் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.

அதன்பிறகு அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஒழுக்கம் கற்பித்து வழிகாட்டியாக விளங்க வேண்டிய ஆசிரியர்கள் ஒழுக்கம் இல்லாமல் நடந்துள்ளனர்.

அனுமதியில்லாமல் நூறு மாணவர்களைச் சேர்த்துகொண்டு நீதிமன்றம் வந்து மாணவர்கள் மீது அனுதாபம் பெற முயற்சி செய்கின்றனர்.

மொத்தமுள்ள நான்கு பருவத் தேர்வில் ஒரு பருவத் தேர்வைக் கூட மாணவர்கள எழுதவில்லை. எந்தவித அனுமதியும் இல்லாமல் கல்லூரி நிர்வாகம் மனசாட்சி இல்லாமல் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தது ஆச்சரியமாக உள்ளது.

இதனால் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் அதை மனுதாரர்கள் அனுபவிக்க வேண்டும். மாணவர்களிடம் பணம் வசூலிப்பதே கல்லூரி நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருந்துள்ளது.

மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து விட்டு, அவர்களை வேறு எந்த கல்லூரிக்கும் மாற்றம் செய்யாமல் இருந்துள்ளனர்.

அனுமதியில்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ் தகுதியற்றது எனத் தெரிந்தும் நூறு மாணவர்களை சேர்த்துள்ளனர். அனுமதியில்லாத கல்லூரியின் சான்றிதழ்கள் வெறும் காகிதமாகவே இருக்கும்.

விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மனுதாரரை நீதிமன்றம் பாதுகாக்க முடியாது.

மாணவர்கள் நலனை பார்க்காமல், சொந்த நலனுக்காக தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

எனவே, மாணவர்களின் நலன் கருதி மனுதாரர் கல்லூரியில் சேர்க்கப்பட்ட மாணவர்களை வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்

எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்தப் பணத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும்.

நூறு மாணவர்களுக்கும் அவர்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொடுக்க விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறலாம்’ என்று உத்தரவில் கூறியுள்ளார்.

ராஜ்

தோற்றது டெல்லி: ஆர்.சி.பி. வீரரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

high court fined rs 5 lakhs Virudhunagar Kalasalingam College
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *