தசரா திருவிழா : சினிமா பாடல்களுக்கு தடை!

தமிழகம்

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவில் சினிமா பாடல்களை ஆடவும் பாடவும் உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார்  என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், குலசேகரன்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மைசூர் தசரா விழாவிற்கு அடுத்து இங்கு தான் தசரா திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இந்த தசரா விழாவில் பொது மக்கள் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு சிலர் மும்பை பார் நடன மங்கையர், துணை சினிமா நடிகைகள், சின்னத் திரை நாடக நடிகர்களை அதிக பணம் கொடுத்து அழைத்து வந்து  பக்தர்களிடையே சினிமா பாடல்களுக்கு ஆட வைக்கின்றனர்.

High court bans singing and dancing movie songs

இந்த நடிகர் நடிகைகள் ஆபாச உடையணிந்து ஆடுவது மாற்று மதத்தினர் மத்தியில் இந்துக்களின் விரத முறை மீதான நன்மதிப்பை குறைக்கிறது.

2017ல் உயர் நீதிமன்றம் ஆபாசமான அங்க அசைவுகளுடன் அரை குறை ஆடைகளுடன் ஆடுவதை தடை செய்து இருந்தும் நீதிமன்ற உத்தரவு உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படவில்லை.

எனவே ஆன்மீக நிகழ்ச்சியான குலசேகரப்பட்டினம் தசரா போன்ற நிகழ்ச்சிகளில் பக்திப் பாடல்கள் இல்லாத பாடல்கள் மற்றும் சினிமா குத்து பாடல்கள் பாடவும், ஆடவும் தடை விதிக்க வேண்டும்

இதனை மீறும் ஒருங்கிணைப்பாளர்கள், ஒலி மற்றும் ஒளி அமைப்பாளர்கள், தசரா குழுக்கள், நடிகர் மற்றும் நடிகையர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி மகாதேவன் தலைமையிலான அமர்வில் இன்று (செப்டம்பர் 14) விசாரணைக்கு வந்தது.

அப்போது கோயில் நிகழ்ச்சியில் ஆண் பெண் இணைந்து ஆபாசமாக மேடையில்  ஆடுவது போன்ற புகைப்படங்கள் மனுதாரர் தரப்பில் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது.

அதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், கோயில் திருவிழாவில் எப்படி இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்த காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் அனுமதிக்கின்றனர் என கேள்வி எழுப்பினர்.

மேலும் தசரா நிகழ்ச்சியில் இது போன்ற ஆடல் பாடல் நடத்த தடை விதித்த நீதிபதிகள், இந்த வருடம் நடைபெறும் தசரா நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர்,  காவல் துறை கண்காணிப்பாளர் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

கோயில்களில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல் நிகழ்ச்சி என்ற பெயரில் ஆபாச நடனம் நடத்த அனுமதிக்க முடியாது. எனவே இது குறித்து உரிய வழிகாட்டுதலுடன் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

கலை.ரா

தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: 2ஆவது நாளாக விடுமுறை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *