இந்து சமய அறநிலையத் துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Jegadeesh

ரூ.100 கோடி மதிப்பிலான ஆதீனத்தின் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் யார் என்ற முழு விவரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று (அக்டோபர் 19 ) உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொதுநல மனு

திருச்சியை சேர்ந்த சாவித்திரி துரைசாமி என்பவர்சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் மிகவும் பழமையான, தொன்மையான மடங்களில் ஒன்று தருமபுர ஆதின மடம்.

இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் நிலங்கள் மற்றும் கோயில்கள் இருக்கிறது.

இந்த கோயில்கள் தருமபுர ஆதினம் சார்பாக பராமரிப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், திருச்சிக்கு அருகில் உள்ள உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜிநாதர் சிவன் கோயிலில் ரூ.100 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலங்கள் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலங்களின் மூலம் பெறப்படும் வருமானத்தை வைத்து தான் கோயில்களுக்கு பராமரிப்பு பணி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த நிலங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

சாதகமான தீர்ப்பு

இது தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளில் தருமபுர ஆதீனத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும், இதுவரை இந்து சமய அறநிலையத்துறையோ, தருமபுர ஆதினம் தரப்பிலோ அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் , சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

வழக்கு விசரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திக், ஆக்கிரமிப்பு சம்பந்தமான ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக கீழமை நீதிமன்றங்கள் ஆதீனத்துக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பு களையும் முன்வைத்து வாதிட்டார்.

ஏன் நடவடிக்கை இல்லை

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்கள் மீது ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது யார் யார் என்ற பட்டியலை நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாகவும், தருமபுர ஆதினம் சார்பாகவும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இது குறித்து நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும் எனக் கூறி வழக்கை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“சோனியா காந்திக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்” : சசிதரூர்

நகைச்சுவை திரைப்படமான ‘பெடியா’ டிரைலர் வெளியீடு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel