திருச்சியில் பலூனுக்கு காற்றடிக்க பயன்படுத்தும் ஹீலியம் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். காயமடைந்த 22 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது விடுமுறை நாட்கள் என்பதாலும், தீபாவளி பண்டிகை நெருங்குவதாலும் கடை வீதிகளில் கூட்டம் அலை மோதுகிறது.
அதுபோன்று நேற்று இரவு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே மேல புலிவார்டு சாலையில் போத்தீஸ், சென்னை சில்க்ஸ், குமரன் தங்க மாளிகை உள்ளிட்ட கடைகள் அமைந்துள்ள பகுதியில் மக்கள் பொருட்களை வாங்க குவிந்திருந்தனர்.
அங்கிருந்த துணிக்கடை ஒன்றின் முன்பு உத்தரப் பிரேதச மாநிலத்தைச் சேர்ந்த அனார் சிங் இரவு 8 மணியளவில் பலூன் விற்பனை செய்து கொண்டிருந்தார்.
இவர் பலூன்களில் காற்று நிரப்புவதற்காக ஹீலியம் கேஸ் சிலிண்டரை உடன் வைத்திருந்தார்.
ஒருவர் உயிரிழப்பு
திடீரென்று பலூன் வியாபாரி வைத்திருந்த சிலிண்டர் வெடித்ததில் அருகில் நின்று கொண்டிருந்த ஒரு நபர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
அப்போது ஏற்பட்ட பயங்கரமான சத்தத்தைக் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடத் தொடங்கினர்.
வெடித்த கேஸ் சிலிண்டர் பறந்து சென்று அருகிலிருந்த வரகனேரி பகுதியைச் சேர்ந்த மன்சூரின் ஆட்டோ மீது விழுந்ததில் வாகனம் முழுவதுமாக நசுங்கி சேதமடைந்தது.
ஆட்டோவின் அருகில் நின்று கொண்டிருந்த 4 இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. ஒரு ஜவுளி கடையின் லிப்ட் கண்ணாடிகள், கண்காணிப்பு கேமராக்களும் சேதமடைந்தன.
போலீஸ் விசாரணை
கடை வீதியில் ஏற்பட்ட இந்த பரபரப்பு சம்பவம் குறித்து கேள்விப்பட்ட திருச்சி மாநகர தீயணைப்புத் துறையினரும் காவல் துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
திருச்சி வடக்கு போலீஸ் துணை ஆணையர் அன்பு, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி ஆணையர் நிவேதாலட்சுமி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், விபத்தில் இறந்தவர் கரூர் மாவட்டம் சின்ன தாராபுரம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ரவிக்குமார் என்ற மாட்டு ரவி என்பது தெரியவந்துள்ளது.
இந்த ரவிக்குமார் ரவுடி என்பதும், சிகரெட் பிடித்துக்கொண்டே மாமூல் கேட்டதும், அப்போது சிலிண்டர் வெடித்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், ஆகியோர் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
22 பேர் காயம்
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் 13 வயது பள்ளி மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சிங்காரத்தோப்பு தனியார் மருத்துவமனையில் 7 பெண்கள், 3 குழந்தைகள், 5 ஆண்கள் உட்பட 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாபு ரோடு தனியார் மருத்துவமனையில் 3 பேரும், அண்ணா சிலை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் 2 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”எந்தந்த இடத்தில் இதுபோன்று ஹீலியம் கேஸ் சிலிண்டர் வைத்து விற்பனை செய்கின்றனர் என திருச்சி முழுவதும் ஆய்வு செய்யப்படும். அப்போது பெர்மிட் இல்லாமல் சிலிண்டர்கள் வைத்திருந்தால் அது பறிமுதல் செய்யப்படும்” என்று கூறினார்.
இச்சம்பவம் குறித்து திருச்சி கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பலூன் வியாபாரி அனார் சிங்கை தேடி வருகின்றனர்.
மோனிஷா
கொட்டும் மழையில் பேசும் ராகுல் : காங்கிரஸில் புயல் வீசுமா?
இந்தியா-தென்னாப்பிரிகா: டி20 தொடரில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!