நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கோடை விழாவில், 200 ஆண்டுக் கால வரலாற்றில் முதன்முறையாக தீட்டுக்கல்லில் ஹெலி டூரிஸம் என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
மலைப் பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை இயக்குவதால் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தி மக்கள், யானை உள்ளிட்ட விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் ஹெலி டூரிஸம் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராசிரியர் முருகவேல் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், பறவைகள் மோதினால் ஹெலிகாப்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், உரிய ஆய்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராயாமல் திட்டமிடப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, காடுகளுக்கு இடைப்பட்ட நகர பகுதிகளில் மட்டுமே ஹெலிகாப்டர்களைத் தரையிறக்க உள்ளதாக தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள்,
“முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் யானைகள், பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என தெரிவித்துள்ள நீதிபதிகள்,
நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் ஹெலி டூரிஸம் சேவை திட்டத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: புரொக்கோலி ஃபிரிட்டர்ஸ்!