கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நாளை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் தங்கியுள்ள மக்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.
இதற்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் நேற்று (டிசம்பர் 23) 300 சிறப்புப் பேருந்துகளும் இன்று (டிசம்பர் 24) 300 சிறப்புப் பேருந்துகளும் என 600 சிறப்புப் பேருந்துகளை இயக்கி வருகிறது.
ஆனால் வெறும் 600 சிறப்புப் பேருந்துகள் மட்டும் போதாது என்று மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இருப்பினும் போக்குவரத்துத் துறை சிறப்புப் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முதல் சென்னையில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வசித்து வரும் மக்கள் பண்டிகை மற்றும் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாகப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளிலும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். ஆம்னி பேருந்துகள், கார்கள் என மக்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர்.
நேற்று மதியத்துக்குப் பிறகு தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் சென்றதால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்துதான் சென்றன.
அதுமட்டுமின்றி செங்கல்பட்டு அடுத்து உள்ள பரனூர் சுங்கச்சாவடியால் விடிய விடிய கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்றைய தினமும் மக்கள் தொடர்ந்து சொந்த ஊர்களுக்குப் பயணித்து வருவதால் இன்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி.பரத் மேற்பார்வையில் பாதுகாப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களைக் கொண்டாடத் தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று பரனூர் சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
“அரசை விட தனியார் நிறுவனங்கள் நல்ல சம்பளம் தரும்” – உதயநிதி ஸ்டாலின்
சுலபமான இலக்கு: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா