கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 3) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையை கடந்தது.
இந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
இந்த நிலையில் ஃபெஞ்சல் புயலால் பெய்த கனமழை, வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சி.பழனி உத்தரவிட்டுள்ளார்.
அதே போன்று தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக்கு மட்டும் விடுமுறை!
தொடர் மழை மற்றும் வெள்ளப்பாதிப்பு காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி ஆகிய இரு வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பள்ளிகள் செயல்படும்!
அதே வேளையில், கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட புதுச்சேரியில் நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்றும், மருத்துவ முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும் என்றும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
தேர்வுகள் ஒத்திவைப்பு!
கனமழை பாதிப்புகள் காரணமாக புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள அதன் உறுப்புக் கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த நியாயவிலைக் கடை பணியாளர் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு, வரும் 5ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிறிஸ்டோபர் ஜெமா