கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி,
பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் அவர்கள் அத்தியாவசிய பணிகளுக்கு கூட வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. சாலைகளில் மழை நீர் தேங்கியதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், பரமத்திவேலூர் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் இரண்டு மணி நேரத்திற்கு கன மழை பெய்தது.
ஈரோட்டில் அதிகாலை முதல் மழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.
கன மழையால் கோபி செட்டிப்பாளையம் அருகில் உள்ள வேட்டைக்காரன்புதூரில் பழமையான புளியமரம் சரிந்தது.
கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஓகேனக்கலுக்கு செல்லும் நடைபாதை, மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் பெய்த கன மழையால் மகாராஜபுரம் தொடக்கப்பள்ளியில் தண்ணீர் புகுந்தது. இதனால் மாணவர்களின் புத்தகங்கள், ஆவணங்கள் மழைநீரில் நனைந்தன.
சென்னையில் மழை விட்டு விட்டு பெய்ததால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செல்வம்
சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் 2ஆவது கடிதம்!
‘காதல்னு வந்துட்டா’ : இயக்குநர் ராம் – நிவின் பாலி பட அப்டேட்!