நாளை (அக்டோபர் 15) முதல் அக்டோபர் 17 வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் வட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (செப்டம்பர் 14) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, செங்கல்பட்டு ஆட்சியர் அருண் ராஜ், காஞ்சிபுரம் ஆட்சியர் கலைசெல்வி மோகன், திருவள்ளூர் ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.
“இந்திய வானிலை ஆய்வு மையம் தனது 13.10.2024 நாளிட்ட அறிவிக்கையில், தமிழ்நாட்டின் கடலோர மற்றும் வட மாவட்டங்களில் 14.10.2024 முதல் 17.10.2024 வரை கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு முன்னெச்சரிக்கை மாதிரிகளின் (forecast models) அடிப்படையில் தமிழ்நாட்டில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது. 14.10.2024 முதல் 17.10.2024 வரை மொத்தம் சுமார் 40 செ.மீ. வரையும், ஒரே நாளில் அதிகபட்சமாக 20 செ.மீ. மழை பெய்யக்கூடும் என்று தெரியவருகிறது.
இந்த கனமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வின் போது, சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தேங்கக்கூடிய மழைநீரை வெளியேற்ற 990 பம்புகள் மற்றும் 57 பம்ப்செட் பொருத்தப்பட்ட டிராக்டர் ஆகியவை தயார் நிலையில் இருக்கின்றன என்று தெரிவித்தார்.
மேலும், மோட்டார் பொருத்தப்பட்ட 36 படகுகள் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும், 46 மெட்ரிக் டன் பிளீச்சிங் பவுடர், 25 மெட்ரிக் டன் சுண்ணாம்பு தூள், பினாயில் ஆகியவை தேவையான அளவு, இருப்பு வைக்கப்பட்டுள்ளதோடு, 169 நிவாரண மையங்கள், போதுமான சமையல் கூடங்கள், மீட்புப் பணிகளுக்காக 59 JCB-க்கள், 272 மர அறுப்பான்கள், 176 நீர் இறைப்பான்கள், 130 ஜெனரேட்டர்கள், 115 லாரிகள் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பேசும்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 33 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 102 JCB-க்கள், 116 படகுகள், 83 ஜெனரேட்டர்கள், 116 நீர் இறைப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 290 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், தனது மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 21 பல்துறை மண்டலக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 276 JCB-க்கள், 10 படகுகள், 30 ஜெனரேட்டர்கள், 250 நீர் இறைப்பான்கள், 43 மர அறுப்பான்கள் உள்ளிட்ட உபகரணங்களும், 62 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன என்று தெரிவித்தார்.
பின்னர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகள் கண்டறியப்பட்டு 64 பல்துறை மண்டலக் குழுக்கள், 48 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும், 660 நிவாரண முகாம்களும், 121 JCB-க்கள், 317 படகுகள், 81 ஜெனரேட்டர்கள், 206 நீர் இறைப்பான்கள், 154 மர அறுப்பான்கள், 31 தண்ணீர் லாரிகள் உள்ளிட்ட உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ரவியிடம் புகார் அளித்தாரா மாணவர்?
’கூல் சுரேஷ் தான் ஹீரோ’ : டிடிஎஃப் வாசனுக்கு இயக்குநர் செல்அம் பதிலடி?