வங்கக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
இந்தியாவில் பருவமழை காரணமாக பல மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிவருகின்றனர்.
இந்நிலையில் , மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியுள்ளது.
இதனால் ஆந்திரா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (செப்டம்பர் 11 ) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ன என்று கூறியுள்ளது.
இதனையடுத்து நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்றும் (செப்டம்பர் 11 ) மற்றும் நாளையும் (செப்டம்பர் 12 ) அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,
அத்துடன் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரையை நோக்கி நகர உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கம் அந்த பகுதிகளில் மிக அதிகமாக இருக்கும் எனவும்,
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள மாவட்டங்களில் மட்டும் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒரு சில பகுதிகளில் இன்று (செப்டம்பர் 11 )மற்றும் நாளை (செப்டம்பர் 12 ) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் 14 செ.மீ மழையும் , கோயம்புத்தூர் மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ மழையும் வால்பாறை அவலாஞ்சி , ஹரிசன் எஸ்டேட் , செருமுள்ளி ஆகிய இடங்களில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் , சேலம் மற்றும் தேக்கடி பகுதிகளில் 1 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா , தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கை கடற்கரை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால்,
மீனவர்கள் யாரும் இன்று (செப்டம்பர் 11 ) முதல் ( செப்டம்பர் 14 ) வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்