சென்னையில் வசிக்கும் மக்கள் யாருக்கு போன் போட்டாலும், “என்னப்பா பிரெட், பிஸ்கட், பால் பாக்கெட், தண்ணி கேன்லாம் வாங்கி வச்சாச்சா. பத்திரமா இருங்கப்பா” என்று அன்பு மழை பொழிகிறார்கள் மறுமுனையில் பேசுபவர்கள் . டிசம்பர் மாதம் நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும் சென்னைவாசிகளுக்கு கெதக் கெதக் என்றுதான் இருக்கிறது. மழைக்கு மிகவும் பிடித்தமான நம்ம வேளச்சேரி மக்கள் இப்போதே மேம்பாலத்தில் வாகனங்களை நிறுத்தத் தொடங்கிவிட்டனர்.
வானிலை ஆய்வு மையம் ஒரு பக்கம், வெதர்மேன்கள் ஒருபக்கம் என மழை குறித்த அப்டேட்டுகளை ஃபேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலில் கற்ற அனுபவத்தில் இருந்து இந்தமுறை இன்னும் கூடுதல் கவனத்தோடு அனைத்து அரசு இயந்திரங்களையும் முடுக்கி விட்டிருக்கிறது தமிழக அரசு.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்தது. மழைக்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும், அதீத கனமழை பெய்ததால், வெள்ள நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாமல் அரசு நிர்வாகம் திணறியது.
அதாவது டிசம்பர் 4-ஆம் தேதி மட்டும் சென்னையில் 45 செ.மீ வரை மழை பெய்தது. மழை குறைந்த பின்பும் வெள்ளம் வடியவில்லை, பால்பாக்கெட் கிடைக்கவில்லை, இரண்டு நாட்களுக்கும் மேலாக பல இடங்களில் கரண்ட் இல்லை, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என சென்னை மாநகரமே அல்லோலகல்லோலப் பட்டது.
இதனால் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்துக்கும் ஆளானது திமுக அரசு. இவ்வளவு மழை பெய்யும் என வானிலை மையம் சரியாக முன்னெச்சரிக்கை கொடுக்கவில்லை என்று தமிழக அரசு இந்திய வானிலை ஆய்வு மையம் மீது குற்றம்சாட்டியது. ஆனால், இந்தமுறை அரசுக்கு பிளாக் மார்க் வந்துவிடக்கூடாது என்று மிகவும் விழிப்போடு செயல்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருமழை நாளை (அக்டோபர் 15) தொடங்க உள்ள நிலையில், தொடர்ச்சியாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் தலைமையில் ரிவ்யூ மீட்டிங் நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் 30-ஆம் தேதி வடகிழக்கு பருவமழையை சமாளிக்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “வெள்ளம் ஏற்பட்டால் அரசு இயந்திரம் விரைவாக செயல்பட வேண்டும். ஒரு உயிர் இழப்பு கூட ஏற்படக்கூடாது” என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இதனை தொட்ர்ந்து துணை முதல்வர் உதயநிதி தலைமையில் அக்டோபர் 5-ஆம் தேதி ரிவ்யூ மீட்டிங் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது, மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், மின்வாரிய கேபிள் அமைக்கும் பணி, குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், மழை நேரத்தில் நான் தினமும் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து அன்றன்று நடந்தப் பணிகளை ஆய்வு செய்வேன். மறுநாள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுறுத்துவேன் என்றார்.
’மக்கள் பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் அதிகாரிகளும் நம்முடன் களத்தில் இருக்கிறார்கள்’ என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், ‘அரசாங்கம் நம்முடன் நிற்கிறது. இந்த மழையை சமாளித்துவிடலாம்’ என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும். அந்தவகையில் நாம் ஒவ்வொருவரும் நம் பணிகளை அமைத்துக்கொள்வோம் என்று உத்தரவிட்டார் உதயநிதி.
தொடர்ந்து அக்டோபர் 8-ஆம் தேதி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் மீட்டிங், நேற்று சென்னை ரிப்பன் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு என உதயநிதி பம்பரமாக சுழன்று பருவமழை பணிகளில் தீவிரமாக இயங்கி வருகிறார்.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மீண்டும் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்க வேண்டும். ஐடி நிறுவன ஊழியர்களை மூன்று நாட்களுக்கு வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
கடந்த முறை ஏற்பட்ட கசப்பான அனுபங்கள் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் அனைத்து அரசு இயந்திரங்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வருகிறது.
வழக்கத்துக்கு மாறாக அரசே ஒரு வாரத்துக்கும் மேலாக… மக்களுக்கு எச்சரிக்கைகளை தொடர்ந்து அளித்து வருகிறது. மழைக் காலத்தில் தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், அனாவசியமாக வெளியே வராதீர்கள் போன்ற அறிவுரைகளால் மக்களும் அலர்ட் ஆகியுள்ளனர்.
மூன்று நாட்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைக்க தொடங்கிவிட்டனர். வேளச்சேரியில் பார்க்கிங் செய்த மக்கள், சேஃபாக நண்பர்கள் வீட்டிற்கு இடம்பெயர தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர் ஆபீஸில் தஞ்சமடைந்துள்ளனர்.
அரசின் இந்த எச்சரிக்கைப் பிரச்சாரம் ஒரு வகையில் நல்லதுதான் என்கிறார்கள் சமூக செயற்பாட்டாளர்கள். மக்களுக்கே இம்முறை மழையில் இருந்து தங்களை காத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது. இது கடும் மழை பெய்தால் கூட சேதத்தை பெருமளவில் குறைக்கும். ஒருவேளை நாம் எதிர்பார்த்தபடி பெருமழை பொழியவில்லை என்றால் கூட யாருக்கும் நட்டமில்லை.
களப் பணியோடு சேர்ந்து இந்த முறை சைக்கலாஜிகள் பணியையும் சேர்த்துச் செய்திருக்கிறது திமுக அரசு. களப் பணி எந்த அளவுக்கு நிறைவாக இருந்தது என்பது மழைக்குப் பிறகுதான் தெரியும்.
2015 முதல் எத்தனையோ மழை, வெள்ளத்தை பார்த்து வரும் இந்த சென்னை மக்கள் இந்த ஆண்டு மழையையும் ஒரு கை பார்த்துவிடலாம் என்று ‘அலர்டாகிக்கடா கைப்புள்ள’ என்ற மோடில் தான் தற்போது இருக்கிறார்கள்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கனமழை : பொதுக்கூட்டத்தை ரத்து செய்த ராமதாஸ்
சென்னைக்கு காத்திருக்கும் கனமழை… தயார் நிலையில் போட், ஜேசிபி, நிவாரண முகாம்கள்!