சென்னையில் இன்று (நவம்பர் 1) மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகப் பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம்,
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 1) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (நவம்பர் 2) கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று மற்றும் நாளை மன்னார் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
ஆகையால் இன்று மற்றும் நாளை மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “கடந்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக செங்குன்றத்தில் 13 செ. மீ. மழை பெய்துள்ளது.
சென்னை பெரம்பூரில் 12 செ. மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 72 ஆண்டுகளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் கனமழை (8 செ.மீ.) 3- வது முறையாக பதிவாகி உள்ளது. 30 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகபட்சமாக இன்று மழை பெய்துள்ளது” என்று கூறினார்.
மோனிஷா
“காவல் துறையில் நேர்மையாக இருப்பது எளிதல்ல”– டிஜிபி சைலேந்திர பாபு பேச்சு!
தமிழகத்தின் வழியில் குஜராத்: மோர்பி செல்லும் மோடிக்கு கடும் எதிர்ப்பு!
72 ஆண்டுகளில் மூன்றாவது முறையாகக் கனமழை!