6 மாவட்டங்களில் நாளை கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 1) தெரிவித்துள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக்டோபர் 1) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்,
இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோல், நாளை (அக்டோபர் 2) தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 3 முதல் 5 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட மூன்று நாட்களில் கனமழைக்கான எச்சரிக்கை தற்போது வரை விடுக்கப்படவில்லை.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்ஷியஸ் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் (அக்டோபர் 1) வரும் 4ஆம் தேதி வரை, இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
ஆகையால் மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மோனிஷா
நடிகர் சங்கத்தில் இருந்து கே. பாக்யராஜ் நீக்கம்!
பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் முடக்கம்: ஏன்?