தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்தநிலையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் நாளை (நவம்பர் 3) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கன்னியாகுமரியில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகர்கோவில், சுசீந்திரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், செட்டிக்குளம், ஆசாரிப்பள்ளம், புத்தேரி, தக்கலை, சுங்கான்கடை, மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, தோவாளை உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பகல் நேரத்தில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி வாகனங்களை இயக்கினர். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி நான்கு நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் குமரியில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு செல்லலாம் என்று திட்டமிட்ட மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கன்னியாகுமரி மட்டுமல்லாது நீலகிரி, திண்டுக்கல், நெல்லை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!
அடேங்கப்பா… அக்டோபர் மாதத்தில் இத்தனை லட்சம் கோடி யுபிஐ பரிவர்த்தனையா?