தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் 6 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இன்று (நவம்பர் 29) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று காலை 8.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் டிசம்பர் 2 அன்று புயலாக வலுப்பெற கூடும்.
வடஇலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 1 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 3 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையில் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 3 ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
சலார் – கே.ஜி.எஃப் இரண்டும் ஒரே யுனிவர்ஸா..? இயக்குனர் பதில்!