heavy rain in southern districts today and tomorrow

தென்மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

தென்மாவட்டங்களான குமரி மற்றும் நெல்லையில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (டிசம்பர்  30) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும்.

இதனால் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

அதிகபட்ச மழை!

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலியில் உள்ள ஊத்தில் 22 செ.மீ, நாலுமுக்கில் 21 செ.மீ, காக்காச்சியில் 20 செ.மீ, மழை பதிவாகியுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகளான குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே அடுத்த இரண்டு நாட்களுக்கு மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

விஜயகாந்துக்கு மணிமண்டபம் : முதல்வரிடம் பிரேமலதா கோரிக்கை!

வெள்ள பாதிப்பு: ரூ.1,000 கோடி நிவாரணத் தொகுப்பு வழங்க ஸ்டாலின் உத்தரவு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts