தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 18) கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மயம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும். இது அக்டோபர் 21 அன்று மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்டோபர் 20 அன்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து குமரிக்கடல் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 33- – 34 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்ஷியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்றும் நாளையும் தமிழக கடலோரப்பகுதிகள், இன்று முதல் அக்டோபர் 22 வரை வங்க கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
அடிக்குமாடி குடியிருப்புகளுக்கு மின் கட்டண சலுகை: முதல்வர் ஸ்டாலின்
நாவலூரில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது: தமிழ்நாடு அரசு