மதுரையில் மிக கனமழை பெய்துள்ளதால் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. இதையடுத்து, மதுரை, சேலம் திருச்சி, நெல்லை, குமரி என பல்வேறு மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மதுரையில் நேற்று முதல் கனமழை பெய்து வருவதால் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
கனமழையின் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது.
அத்திக்குளம் குடியிருப்பு பகுதியில் புகுந்த மழை நீரை மின் மோட்டார் மூலம் மக்கள் வெளியேற்றி வருகின்றனர்.
செல்லூர், ஆனையூர், ஆபிசர் டவுன், பிபி குளம், ஒத்தக்கடை, காந்திநகர், பாரதிநகர், பார்க் டவுன், ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகள், மருத்துவமனை மற்றும் கடைகளை சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மதுரை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மதுரை வடக்கு மற்றும் கிழக்கு வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் கனமழையை ஒட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும், களத்திற்கு சென்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
மதுரை தல்லாகுளம் பறக்கும் பாலத்தின் கீழ் பகுதியில் கனமழையால் குளம் போல் தேங்கிய மழைநீர்#MaduraiRain | #marduraiflood pic.twitter.com/Zaliepeqnv
— நீதிமான் (@Neethiman3) October 26, 2024
அதுபோன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மதுரை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது, “தாழ்வான பகுதிகளில் உள்ள பொது மக்களை தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் உணவு தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களிடம் சென்று சேர்வதை உறுதி செய்திட வேண்டும்” என்றும் உத்தரவிட்டார்.
கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 150 க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் செல்லூர் பகுதியில் தேங்கிய மழை நீரை வைகை ஆற்றுக்கு திருப்பி விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வைகை ஆற்றில் தடையின்றி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. இன்று மாலைக்குள் மதுரையில் தேங்கியுள்ள மழைநீர் வடிந்து விடும் என்று மதுரை ஆணையர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல் !
பிக் பாஸ் 8 : வீட்டுக்குள் புலம்பும் சவுந்தர்யா