கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
குமரி மாவட்டத்தின் மலையோர பகுதிகளில் கடந்த இரு நாட்களாக இரவு, பகலாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், குளங்கள் என அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகின்றன.
நேற்று இரவும் , இன்றும் பெய்து வரும் மழை காரணமாக கோதையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தடுப்பு வேலிகளை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
இதைத் தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி சார்பில் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு , எச்சரிக்கை அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து துண்டிப்பு
மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பலத்த மழை கொட்டி வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் கோதையாற்றின் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மோதிர மலை-குற்றியாறு சாலையில் உள்ள தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் சென்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தொடர்ந்து மலையோர பகுதியில் மழை பெய்து வருவதால் தச்ச மலை களப்பாறை உள்ளிட்ட கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சிற்றார் பட்டணங்கால்வாய் செல்லும் மாத்தூர் பகுதியில் உடைப்பு ஏற்பட்டதையடுத்து அருகில் செல்லும் சாலையிலும் உடைப்பு ஏற்பட்டது.
இதனால் ஆசியாவிலேயே உயரமும் நீளமும் கொண்ட மாத்தூர் தொட்டிப் பாலம் செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்து வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மேலும் கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 4 குழுக்கள் சென்றுள்ளன.
இன்றும் கனமழை
இந்நிலையில், நீலகிரி, ஈரோடு, தென்காசி, நெல்லை, மதுரை, கன்னியாகுமரி விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கலை
மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கம்: மாஸ்டர் பிளான் ஒப்பந்தம் ரத்து!