வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவம்பர் 30) மாலை காரைக்கால் – மகாபலிபுரம் இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (நவம்பர் 29) இரவு முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
காலை முதல் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் இயங்கி வருகின்றன. கோயம்பேடு, அரும்பாக்கம், பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பார்க்கிங் தண்ணீரில் மூழ்க வாய்ப்புள்ளதால் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கையாக, வேளச்சேரி மற்றும் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள மேம்பாலங்களில் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் தங்களது கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
நேற்று இரவு முதல் மழை பெய்து வருவதால், மாணிக்கம் நகர், ஸ்டான்லி நகர், பெரம்பூர் நெடுஞ்சாலை சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்கள் மழைநீரை அப்புறப்படுத்தியதால், சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சேவை சீரானது.
விமான சேவையைப் பொறுத்தவரையில், புனே, மஸ்கட், குவைத், மும்பையில் இருந்து சென்னை வந்த விமானங்கள் மோசமான வானிலை காரணமாக, விமானத்தை தரையிறக்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன. வானிலை சீரானதும் விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட உள்ளன.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மக்களே அலர்ட்… சென்னைக்கு தென்கிழக்கே 190 கி.மீ தொலைவில் ‘ஃபெஞ்சல்’ புயல்!
ஆசை நமக்குள் எப்படி உருவாகிறது?