சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் 2 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இன்று (ஆகஸ்ட் 29) தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீத்தது.
வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், தாம்பரம், குரோம்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், வேளச்சேரி, அண்ணா சாலை, நந்தனம், கோட்டூர்புரம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், போரூர், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும் செங்கல்பட்டு, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.
இதனால் பல்வேறு சாலைகளில் மழை தேங்கியுள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அம்பத்தூர், வானகரம், கோடம்பாக்கம், அண்ணாநகர் நுங்கம்பாக்கம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் 50 மி.மீ.க்கு மேல் மழை பெய்தது.
Ambattur, Vanagaram, Kodambakkam, Anna Nagar Nungambakkam bore the brunt force of 50 mm+ rains in less than an hour
Meenambakkam now 360+ is inching slowly towards breaking the All time August month rainfall of 395.3 mm in 1967.
Clouds have moved into sea and day will be clear. pic.twitter.com/R6iUnN77lr
— Tamil Nadu Weatherman (@praddy06) August 29, 2023
மீனம்பாக்கத்தில் இப்போது 360 மிமீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 395.3 மிமீ மழை பதிவாகியிருந்தது.
மேகங்கள் கடலுக்குள் சென்றுவிட்டதால் பகல் தெளிவாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா