சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் வானிலை ஆய்வு மையம் 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் உள் தமிழகத்திலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
அதிகபட்சமாக நாகப்பட்டினம் கோடியக்கரையில் 18 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 12 சென்டிமீட்டர் மழையும், சென்னையில் கொளத்தூர், மாதவரம், அம்பத்தூர் ஆகிய இடங்களில் தலா 11 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், ஆலந்தூர், மீனம்பாக்கம், பல்லாவரம், விமான நிலையம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், சேலையூர், மடிப்பாக்கம், பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வேளச்சேரி, தி.நகர், ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், முழங்கால் அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் மூன்று மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று (டிசம்பர் 12) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நேற்று இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (12-12-2024) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுகுறைந்து தென்தமிழக பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
12-12-2024: தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தி திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
13-12-2024: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
14-12-2024 மற்றும் 15-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16-12-2024: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சீதையாக நடிப்பதால் அசைவம் சாப்பிடுவதில்லையா? – சாய் பல்லவி காட்டமான பதிலடி!
கனமழை… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?