சென்னையில் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஜூன் 17) எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு 2 மணி முதல் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.
எங்கெல்லாம் மழை?
சென்னை கிண்டி, அசோக் நகர், ஆலந்தூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், மைலாப்பூர், வேளச்சேரி, மேடவாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
சுமார் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பெய்த இந்த திடீர் மழையால் பல இடங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியது. பல்வேறு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதே போல பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
சூறைக்காற்றுடன் பெய்த மழையினால் சின்னமலை அருகே நள்ளிரவில் பெரிய மரம் முறிந்து விழுந்தது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
விமான சேவை பாதிப்பு!
கனமழை காரணமாக சென்னையில் விமான நிலையத்தில் உள்ள தரையிறங்கு தளத்தில் மழை நீர் தேங்கியதால் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 7 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. ஒரு விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டது.
நள்ளிரவு முதல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 10.4 செ.மீ மழையும், சோழிங்கநல்லூரில் 8.2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
இன்று மழை பெய்யுமா?
இதற்கிடையே இன்று முதல் தமிழ்நாட்டில் வரும் 23-ஆம் தேதிவரை பகல் நேரத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும், இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஹெல்த் டிப்ஸ்: திடீர் பல் வலி… தீர்வுதான் என்ன?
டாப் 10 நியூஸ் : விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி முதல் பொன்முடி வழக்கு விசாரணை வரை!