தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் மழை குறைந்து பனி பொழிவு அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் 4 முதல் 7 செமீ அளவுக்கு மழை பெய்துள்ளது.
இந்நிலையில் நாளை 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இன்று (ஜனவரி 17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-01-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
19-01-2025: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
நீயா? நானா? போட்டியில் ஈரோடு கிழக்கு!
ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு : தேதி குறித்த உச்ச நீதிமன்றம்!