“108 இடங்களில் கனமழை, 16 இடங்களில் அதி கனமழை” -பாலச்சந்திரன்

தமிழகம்

கடந்த 24 மணி நேரத்தில் 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடர்பாக இன்று(நவம்பர் 12) செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்,

“தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுகுறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வடதமிழகம் புதுச்சேரி கடற்கரை பகுதியில் நிலவுகிறது.

இது தொடர்ந்து மேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், கேரளப் பகுதிகளை கடந்து அரபிக்கடல் பகுதிக்குச் செல்லும்.

கடந்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக தீவிரமாக உள்ளது.

பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 6 இடங்களில் அதி கனமழையும், 16 இடங்களில் மிக கனமழையும், 108 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை 12,13 ஆகிய தேதிகளில் பரவலாகவும், 14,15 ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கனமழையைப் பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும்.

சென்னை முதல் கடலூர் வரையிலான வட கடலோர மாவட்டங்கள் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை, அடுத்து வரும் 24 மணி நேரத்துக்கு வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் சில பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழையை பொறுத்த வரை கடந்த 1 ஆம் தேதி முதல் இன்று வரையிலான காலக்கட்டத்தில் பதிவான மழையின் அளவு 29 செ.மீ. இதன் இயல்பான அளவு 26 செ.மீ. இயல்பைவிட 12 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.

சென்னையை பொறுத்த வரை பதிவான மழையின் அளவு 57 செ.மீ, இயல்பு அளவு 45 செ.மீ. இயல்பை விட 27 சதவீதம் அதிக மழை பெய்திருக்கிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் 12 சதவீதம் அதிக மழை பொழிந்திருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கலை.ரா

சீர்காழியில் மேக வெடிப்பா? – வானிலை மையம் விளக்கம்!

வீடியோ : உலகின் உயரமான வாக்குச்சாவடியில் நடந்த சாதனை!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.