குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (டிசம்பர் 26) 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
நேற்று (டிசம்பர் 25) இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று (டிசம்பர் 26) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது.
இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேலும் வலுவிழக்கக்கூடும்.
இதன் காரணமாக இன்று தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும் வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிசம்பர் 27 முதல் 29 வரை தமிழ்நாடு,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குறைந்தபட்ச 24-25 டிகிரி செல்ஷியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று லட்சத்தீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நாளை லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மோனிஷா
“ஓபிஎஸ் ஒரு டம்மி பீஸ்” – கலாய்த்த ஜெயக்குமார்
நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி!