தொடர் கனமழை மற்றும் வானிலை மையத்தின் எச்சரிக்கை எதிரொலியாக நீலகிரி, கோவையைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (ஜூன் 26) விடுமுறை அறிவித்து இரு மாவட்ட ஆட்சியர்களும் உத்தரவிட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவக்காற்று மழை காரணமாக கேரளா மற்றும் அதனையொட்டிய தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டது.
அதன்படி நேற்று இரவு முதல் நீலகிரியில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்திற்கு உள்ளாககூடும் என்பதால் ,கூடலூர், பந்தலூர் ஆகிய 2 தாலுகாக்களிலுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக நீலகிரி ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
அதேபோன்று கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இன்றும் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை தெரிவித்துள்ளது. அதனை முன்னிட்டு வால்பாறையில் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பியூட்டி டிப்ஸ்: தோல் உரியும் பிரச்சினைக்கு… தீர்வு இதோ?
ஹெல்த் டிப்ஸ்: எதிரில் வரும் வாகன வெளிச்சத்தால் ஏற்படும் கண் கூச்சம்… தவிர்ப்பது எப்படி?